பாக்தாத், நவம்பர் 17 – அமெரிக்கப் பிணையாளி பீட்டர் எட்வர்ட் காஸிக் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட செயலுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது சாத்தானின் செயல், தீய செயல், ஏற்றுக்கொள்ள முடியாத கொடும் செயல் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்தவர் பீட்டர் எட்வர்ட் காஸிக். இவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதியாக சிறை பிடித்தனர்.
பின்னர் அவரை இஸ்லாமியராக கட்டாய மதமாற்றம் செய்தனர். அவருக்கு அப்துல் ரஹ்மான் காஸிக் என்றும் பெயரிட்டனர். அதன் பின்னர் அவரைத் தலையைத் துண்டித்துப் படுகொலை செய்தனர்.
துண்டிக்கப்பட்ட தலையுடன் காஸிக் பிணமாக கிடக்கும் காணொளியையும் வெளியிட்டுள்ளனர். இந்த செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. காஸிக்கின் தலை, தீவிரவாதியின் காலடியில் விழுந்து கிடக்கிறது.
அந்த நபர் சுத்தமான இங்கிலாந்து ஆங்கிலத்தில் பேசுகிறார். அவர் கூறுகையில், “இது பீட்டர் எட்வர்ட் காஸிக், அமெரிக்க குடிமகன் என்று அந்த நபர் கூறுகிறார். இந்த, காணொளி உண்மையானதுதான் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து அதிபர் ஒபாமா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இது சாத்தானின் செயல், தீய சக்தியின் செயல். ஏற்றுக் கொள்ள முடியாத செயல். காஸிக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
“சிரிய உள்நாட்டுப் போரால் காயமடைந்த பல சிரிய நாட்டு மக்களுக்காக உழைத்தவர் காஸிக். பலரைக் காயத்திலிருந்து மீட்டவர். மனித நேயம் மிக்கவர்” என்று அவர் கூறியுள்ளார்.