லக்னோ, நவம்பர் 17 – கீதை என்ற தர்ம போதனையை உலகிற்கு உபதேசித்த கிருஷ்ண பரமாத்மா தனது இளம்பருவத்தில் விளையாடி மகிழ்ந்ததாக நம்பப்படும் தற்போதைய உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் ‘சந்திரோதயா மந்திர்’ என்ற பெயரில் 70 அடுக்குகளை கொண்ட உலகின் மிக உயரமான இந்து ஆலயத்தை கட்ட இஸ்கான் நிறுவனர் ஸ்ரீல பிரபுபாதா விரும்பினார்.
‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம்’ என்றறியப்படும் ‘இஸ்கான்’ அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தற்போதைய ‘அக்ஷய் தாம் பிருந்தாவன்’ பகுதி அருகே 213 மீட்டர் உயரத்தில் எழும்பவுள்ள இந்த சந்திரோதயா மந்திருக்கான திட்டப்பணிகளை கடந்த ஹோலி பண்டிகையின்போது அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி நடந்தது. இவ்விழாவில் ஆன்மிக பெரியோர்கள், மதுரா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் பெரும் திரளாக பங்கேற்றனர்.
இந்நிலையில், நாளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த ஆலயத்துக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் இந்த ஆலயத்தை கட்டி முடிக்க இஸ்கான் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.