கோலாலம்பூர், நவம்பர் 18 – கடந்த இரு பொதுத்தேர்தல்களாக சில தொகுதிகளில் மஇகா தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், அத்தொகுதிகளை மீட்டெடுக்க கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார் என்று மஇகா முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டி.மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி அமோக வெற்றியடைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் வேளையில், அதற்கு உறுதுணையாக மஇகா கட்சியும் தனது தொகுதிகளை மீட்டெடுக்க பாடுபட வேண்டும் என்றும் மோகன் கூறியுள்ளார்.
அதற்கான நடவடிக்கைகளை மஇகா தலைவர் பழனிவேல் விரைவில் எடுக்காவிட்டால் 14-வது பொதுத்தேர்தலில் மீண்டும் கட்சி சரிவை சந்திப்பதோடு, தேசிய முன்னணிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மோகன் வலியுறுத்தியுள்ளார்.
கட்சித் தேர்தல் ஆண்டில் புதிதாக கிளைகளைத் தொடங்குவதற்கு அனுமதியில்லை என்றும், ஆனால் பழனிவேலின் ஆசியுடன் சுமார் 300 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன என்றும் மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
அதோடு, தொகுதி, தேசிய அளவில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியுற்ற பலர், மஇகா தேர்தலில் போட்டியிட்டதுடன், வாக்களித்தும் உள்ளனர் என்றும் மோகன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மஇகா தேர்தல் குளறுபடிகள் தொடர்பில் சங்கங்களில் பதிவிலாகா எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த அக்டோபர் 16-ம் தேதி பிரதமரிடம் ஆட்சேப மனு அளித்ததாகவும், பிரதமர் இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பார் என தாங்கள் நம்புவதாகவும் மோகன் தெரிவித்துள்ளார்.