கோலாலம்பூர், நவம்பர் 22 – சாம்சுங் நிறுவனம் தனது திறன்பேசிகளுக்கு ‘மில்க் வீடியோ’ (Milk Video) எனும் புதிய இலவச காணொளி சேவையைத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் ‘யூ-டியூப்’ (Youtube), ‘ஸ்போடிஃபை’ (Spotify) உள்ளிட்ட காணொளி தளங்களுக்கு எதிர்காலத்தில் கடுமையான போட்டியினை அளிக்கத் தயாராகி வருகின்றது.
சாம்சுங் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ‘மில்க் மியூஸிக்’ (Milk Music) எனும் இணைய இசை ஒலிபரப்புச் சேவையை தனது திறன்பேசிகளுக்கென பிரத்தியேகமாக ஆரம்பித்தது.
இந்நிலையில் சாம்சுங், தனது கேலக்ஸி திறன்பேசிகளுக்கு புதிய காணொளி ஒளிபரப்புச் சேவையை மில்க் வீடியோ செயலி வாயிலாகத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் பொழுபோக்கு, இசை உள்ளிட்ட பல்வேறு காணொளிகளைக் காணமுடியும். சாம்சுங் கேலக்ஸி திறன்பேசிகளில் மட்டும் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை அனைத்து சாம்சுங் திறன்பேசிகளிலும் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பாக சாம்சுங் நிர்வாகத் துணைத் தலைவர் ஜான் ப்ளசண்ட்ஸ் கூறுகையில், “பயனர்கள் திறன்பேசி வாயிலாக புதிய அனுபவத்தை உணர இந்த மில்க் வீடியோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. இசை ஒலிபரப்பிற்காக தொடங்கப்பட்ட மில்க் மியூஸிக்கின் மேம்படுத்தப்பட்ட பதிப்புதான் மில்க் வீடியோ” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த செயலி தற்சமயம் அமெரிக்காவில் மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் உலகம் முழுவதும் உள்ள பயனர்களும் பயன்பெறும் வகையில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.