வாஷிங்டன், நவம்பர் 22 – இந்தியாவில் ஜனவரி மாதம் 26-ம் தேதி நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு இந்தியப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மோடியின் அழைப்பை ஒபாமாவும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியக் குடியரசு தின விழாவில் ஒரு முக்கிய நண்பரை பங்கேற்கச் செய்யவுள்ளோம். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதன் மூலம் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முதல் அமெரிக்க அதிபராக ஒபாமா திகழ்வார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல் வெளியான சில மணி நேரங்களுக்குள் மோடியின் அழைப்பை ஒபாமா ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், வரும் ஜனவரி மாதம் 26-ம் தேதி அன்று டெல்லியில் நடைபெறும் இந்தியக் குடியரசு தின விழாவில், அவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என்றும் அமெரிக்க அதிபரின் ஊடகத்துறை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஒபாமாவின் இந்தியப் பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருக்கும் என்றும், அவர் வருகையின் மூலம் இந்திய-அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம் தொடங்கும் என்றும் இந்தியத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.