கோலாலம்பூர், நவ. 22 – அம்னோ மோசமான நிலையில் உள்ளது என்றும் கட்சியின் செயல்பாடு மாற வேண்டும் என்றும் அம்னோ துணைத் தலைவரும், துணைப் பிரதமருமான டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் கூறியுள்ளார். இல்லாவிடில் ஆட்சி மாற்றம் நிகழும் என்றும் அவர் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“நாம் நெருக்கடியான ஒரு நிலையை எட்டிப் பிடித்துள்ளோம். மாற்றம் ஏற்படவோ அல்லது மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படவோ வேண்டும். இல்லையேல் நாம் தோற்க நேரிடும். இதற்கான அறிகுறி நம் கண் முன்னே தெளிவாகத் தெரிகிறது. கடந்த 2008 மற்றும் 2013 பொதுத் தேர்தல்களில் நம் செயல்பாடு மிக மோசமாக இருந்தது,” என்றார் மொய்தீன் யாசின்.
அம்னோவில் இன்னும் பல தீர்க்கப்படாத உட்கட்சி விவகாரங்கள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், கட்சிப் பதவிகளுக்கு இன்னும் போட்டி இருப்பதாகத் தெரிவித்தார்.
“பண அரசியல், அலட்சியப் போக்கு, புறக்கணிப்பு ஆகியன கட்சியின் பிரிவுகளாகிவிட்டன. இதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எனினும் நாம் உறுதியான துணிவான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும். அம்னோ இளைஞர் பிரிவு மற்றும் மகளிர் பிரிவு வலுவிழந்து விட்டதாக யாரும் கருதிவிட வேண்டாம். முன்பு போல் இந்தப் பிரிவுகள் செயல்படவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இதே நிலை நீடிக்கக்கூடாது” என்றும் மொய்தீன் கூறினார்.
“என்னைப் பொறுத்தவரை மாற வேண்டும் என நினைத்தால் நாம் மாறியே ஆக
வேண்டும். இல்லையேல் நாம் மாற்றப்படுவோம்,” என்று நாட்டின் துணைப் பிரதமருமான மொய்தீன் யாசின் மேலும் தெரிவித்தார்.