கோவா, நவம்பர் 24 – கோவாவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் கோவா இந்தியத் திரைப்பட விழாவில் இந்த ஆண்டுக்கான சிறந்த திரைப் பிரபலத்திற்கான விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது.
அண்மையில் கோவாவில் தொடங்கிய இந்திய அனைத்துலக திரைப்பட விழாவில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ரஜினிகாந்திற்கு இவ்விருதினை வழங்கினார்.
தொடக்க விழாவில் பாலிவுட் திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, மனோகர் பரிக்கர், கோவா முதலமைச்சர் லட்சுமிகாந்த், ஆளுநர் மிருதுளா ஆகியோர் திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றினர்.
இந்திய சினிமா நூறு ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்திற்கு, சிறந்த திரைப் பிரபலத்திற்கான விருது வழங்கப்பட்டது.
விருதினைப் பெற்றுக் கொண்டு உரையாற்றும்போது ரஜினி காந்த் நெகிழ்ச்சியுடனும், கண் கலங்கியவாறும் காணப்பட்டார்.
விருதினை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் – ரஜினி
தமது ஏற்புரையில், மத்திய அரசு தனக்கு வழங்கிய சினிமா பிரபலம் 2014 விருதினை திரைத் துறைக்கும் தனது ரசிகர்களுக்கும் சமர்ப்பிப்பதாக ரஜினிகாந்த் கூறினார்.
நன்றி தெரிவித்து ரஜினி பேசியதாவது; “கோவா ஆளுநர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அருண் ஜெட்லி, என் அண்ணா அமிதாப்ஜி வழங்கிய இந்த விருது எனக்குப் பெருமையாகவும் கவுரவமாகவும் உள்ளது, விருதினை அளித்த மத்திய அரசுக்கும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கும் நன்றி. விருதுக்காகத்தான் மேடைக்கு வந்தேன். என்ன பேசுவது என்ற திட்டம் ஏதுமில்லை. அமிதாப் பச்சன் இத்தனை அருமையாகப் பேசிய பிறகு நான் என்ன பேசுவது? இந்த விருதினை எனது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், எழுதியவர்கள், சக கலைஞர்கள் மற்றும் என் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் நன்றி,” என்றார் ரஜினி.
இதற்கிடையில், இந்திய அனைத்துலக திரைப்பட விழா ஆண்டு தோறும் நடைபெறும் நிரந்தர மையமாக இனி கோவா திகழும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.