வாஷிங்டன், நவம்பர் 24 – அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள மற்ற நாட்டினருக்கு பலனளிக்கும் வகையிலும், நாட்டில் மந்தமாக இயங்கும் இடம் பெயர்வோருக்கான சட்டத்தினை திருத்தி அமைக்கும் வகையிலும் சில முக்கிய முடிவுகளை வெளியிட்டுள்ளார் ஒபாமா.
இதன் மூலமாக, அமெரிக்காவில் சட்ட விரோதமாக வசித்து வரும் பல லட்சத்திற்கும் மேலான மக்களுக்கு விரைவான ஒரு மாற்றத்தினை வழங்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும், நாட்டின் பாதுகாப்பினை மேம்படுத்தும் வகையில், வெளிநாட்டில் இருந்து வேலைக்காக வருபவர்களின் புலம்பெயர்வு சட்டங்களின் திருத்தங்களையும் வெளியிட்டுள்ளார்.
ஒபாமாவின் இந்த அறிவிப்பினால், சட்ட விரோதமாக வசித்து வருகின்றவர்களுக்கு விரைவில் ஒரு விடிவு வரும் என்று தெரியவந்துள்ளது. இப்புதிய நடைமுறையினால் அவர்கள் அமெரிக்க குடியுரிமையோ, வீடு வாங்கவோ, அல்லது குடியுரிமை அட்டை எனப்படும் “கீர்ன் கார்டு” பெறவோ வாய்ப்பில்லை.
ஆனால், அவர்கள் அனைவரும் அமெரிக்காவில் எந்த பயமுமின்றி தங்களுடைய பணியினைத் தொடர முடியும். மேலும், வேலைக்கான உரிமத்தையும், பாதுகாப்பிற்கான எண்ணையும் பெற முடியும்.
மேலும், தங்களுடைய சொந்த நாடுகளுக்கு சென்று வரவும் அனுமதி வழங்கப்படும். மேலும், இளம் வயதினருக்கும் இந்த புதிய திட்டம் வழிகாட்டியுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இளம்வயதினருக்கான புலம் பெயர்ந்தோருக்கான உரிமைகளில் தற்போது சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.
2012 ஆம் ஆண்டு நடைமுறையின்படி அமெரிக்காவிற்கு வந்தடைந்த இளைஞர்கள் 31 வயதுக்கு குறைவாகவும், ஜூன் 15, 2007க்கு முன்னர் வந்தவர்களாகவும் இருக்க வேண்டும். ஆனால், ஒபாமா அதனை தளர்த்தி, ஜனவரி 1, 2010 என்று ஆக்கியுள்ளார்.
வயது வரம்பினையும் அதிகரித்துள்ளார். இதனால், மேலும் 270,000 பேர் பயனடைவார்கள். ஆனால், இந்த அறிவிப்பின்படி சட்டவிரோத குடியேறிகளின் பெற்றோருக்கோ, அதிக அளவிலான வருடங்கள் வசித்தவர்களுக்கோ பொருந்தாது.
ஹோம்லாண்ட் பாதுகாப்பு துறையின் மூலமாக, “சவுதர்ன் பார்டர் கேம்பைன்” என்ற திட்டம் உருவாகியுள்ளது. இதன் மூலமாக எல்லையைக் கடக்கும் போது, அதிக அளவிலான மக்களின் குடியுரிமை குறித்த விவரங்கள் பதிவேற்றப்படும். மேலும், இப்புதிய திட்டத்தின் மூலமாக கலிபோர்னியா போன்ற பகுதிகளில் உயர் ரக விசாக்களில் வசித்து வருபவர்கள், அதாவது தகவல் தொழில்துட்பம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு பல புதிய நடைமுறைகளை வகுத்துள்ளது.
பழைய நடைமுறையின்படி, ஓர் நிறுவனம் மூலமாக வருபவர்கள், மற்றொரு வேலைக்கு மாறும்போது அதனுடைய பதிவேட்டு வேலைகள் மிகவும் கடினமானதாக இருக்கும். ஆனால், தற்போதைய அறிவிப்பினால் அவை மிகவும் எளிமையானதாக ஆக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிவிப்பினால் மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் வேலையில் இருப்பவர்களின் மனைவி அல்லது கணவனும் வேலைக்கான உத்தரவினை எளிதாக பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்றும் தெரிகின்றது.
ஏனெனில், தொடர்ச்சியான விடுமுறைகள் வர இருப்பதன் காரணமாக அடுத்த வருட ஆரம்பத்தில் இருந்து இந்த நடைமுறைகள் செயல்பாட்டிற்கு வரலாம் என்றும் சில செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.