அவர்கள் சுவாசிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் பொது சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடல்நலம் தேறி வருவதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இதற்கிடையே இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவைச் சேர்ந்த கர்டியான்டோ (38 வயது), வடகொரியாவைச் சேர்ந்த பாங் சோங் (29 வயது) மற்றும் மியான்மாரைச் சேர்ந்த டுன் டுன் வின் (29 வயது) ஆகிய மூவரின் உடல்களும் தற்போது ஸ்ரீ அமான் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைக்காக இந்த உடல்கள் திங்கட்கிழமை சரவாக் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்கள் வடகொரியா, இந்தோனேசியா, மியான்மார், சீனா மற்றும் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
சரவாக் தலைநகர் கூச்சிங்கில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ அமான் அருகே இருக்கும் பந்து நிலக்கரி சுரங்கத்தில் வியாழக்கிழமை திடீர் வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் 3 பேர் பலியாகினர், 30 பேர் காயமடைந்தனர்.