கோலாலம்பூர், நவம்பர் 26 – 2014-ம் ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம், இரண்டு வார எய்ட்ஸ் ஒழிப்பு பிரச்சாரத்தை துவக்கி உள்ளது. ‘ரெட்’ (RED) என்ற அமைப்புடன் சேர்ந்து ஆண்டு தோறும் எய்ட்ஸ் ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னிறுத்தி வரும் ஆப்பிள், இதற்காக கணிசமான தொகையினை நன்கொடையாகவும் அளித்து வருகின்றது.
இந்த இரண்டு வார காலத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது இணையதளத்தில் ‘ரெட்’ (Red) என்ற பெயரில் குறிப்பிட்ட சில தயாரிப்புகளையும், புதிய மேம்பாடுகளைக் கொண்ட 25 செயலிகளையும் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளது. இதில் கிடைக்கும் வருமானத்தில் கணிசமான தொகை ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோய் ஒழிப்பிற்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று ஆப்பிள் வட்டாரங்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டிம் குக் கூறுகையில், “ரெட் அமைப்புடன் சேர்ந்து இயங்குவதில் ஆப்பிள் பெருமை கொள்கிறது. எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களும் எங்களுடன் சேர்ந்து இந்த போராட்டத்தில் கடந்த 8 வருடங்களாகப் பயணித்து வருகின்றனர். இதன் மூலம் பலருக்கு வாழ்வை பரிசளிக்க முடிகிறது” என்று அவர் கூறியுள்ளார்.
எய்ட்ஸ் ஒழிப்பு பிரச்சாரத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு பற்றி ரெட் அமைப்பின் நிறுவனர் பியுனோ கூறுகையில், “ஆப்பிள் நிறுவனம் எய்ட்ஸ் ஒழிப்பிற்கு சாதாரண பிரச்சாரத்தை மட்டும் முன் வைக்க வில்லை. இலாபம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட வர்த்தகத்தின் மற்றொரு பரிமாணத்தை ஆப்பிள் வெளிப்படுத்தி உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.