அண்மையில் அங்கு ஏற்பட்ட சீரழிவுகளுக்கு இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளே காரணம் என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பான ஆதாரங்களை விரைவில் வெளியிட இருப்பதாகக் கூறினார்.
“சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான ஆதாரங்கள் அனைத்துமே புகைப்பட வடிவில் வெளியிடப்படும். எங்களிடம் உள்ள ஆதாரங்களைத் தவிர்த்து மேலும் பல ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. கேமரன் மலையில் ஏற்பட்ட பேரிடருக்கு காரணமானவர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அம்பலமாகும்,” என்றார் பழனிவேல்.
கேமரன் மலையில் 30 ஆயிரம் கள்ளக்குடியேறிகள் இருப்பதாக வெளியான தகவலை அறவே மறுத்த அவர், இது பொய்யான தகவல் என்றார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கேமரன் மலை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது என்று சுட்டிக்காட்டிய அவர், அச்சமயத்தில் அங்கு சட்டவிரோத நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.
“முன்பு சட்டத்திற்கு உட்பட்டே அங்கு விவசாயம் பார்க்கப்பட்டது. பல்வேறு நாடுகளுக்கு கேமரன் மலையில் இருந்து விவசாய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது சட்டவிரோத நடவடிக்கைகளால் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. இதற்கு காரணமானவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை,” என்றார் பழனிவேல்.
கேமரன் மலையில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் பகாங் சுல்தான் தன் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுவதை மறுத்த அவர், அங்குள்ள உண்மை நிலவரம் குறித்து சுல்தானிடம் விவரிக்க இருப்பதாகக் கூறினார்.சுல்தானைச் சந்திக்க அனுமதியும் நேரமும் கோரி அவருக்குக் கடிதம் அனுப்ப இருப்பதாக பழனிவேல் மேலும் தெரிவித்தார்.