கோலாலம்பூர், நவம்பர் 26 – மெய்க்காப்பாளர்கள் இன்றி தன்னுடன் சபாவுக்கு வருகை தருமாறு சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை டத்தோஸ்ரீ நஸ்ரிக்கு அழைப்பு விடுத்துள்ளார்
உள்துறை அமைச்சர் டத்தோஷ்ரீ சாஹிட் ஹமிடி.
அம்னோ பொதுக்குழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட சபா தற்போது பாதுகாப்பான பகுதியாக உள்ளது என்றார்.
“சபாவிற்கு என்னுடன் மெய்க்காப்பாளர்கள் இன்றி வருமாறு நஸ்ரிக்கு அழைப்பு
விடுக்கிறேன். இதன் மூலம் அங்குள்ள நிலைமையை அவர் நேரில் கண்டறிய
முடியும். சபாவில் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கிழக்கு சபா பாதுகாப்புப்
படையின் தலைவராக நியமிக்கப்பட்டது முதல் அப்பகுதி பாதுகாப்பாக உள்ளது.
எனவே சுற்றுலா பயணம் மேற்கொள்ள சபா பாதுகாப்பற்ற பகுதி என அத்துறையின்
அமைச்சர் கூறியதை ஏற்க முடியாது,” என்றார் சாஹிட் ஹமிடி.
கடந்த இரு வாரங்களாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவின் மூலம்
சபாவின் பாதுகாப்பு நிலை மேம்பட்டிருப்பதாகவும், குறிப்பாக கிழக்கு சபா
பாதுகாப்பு பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் என்ற வகையில் இந்த ஊரடங்கு உத்தரவுகளை தாம்
பிறப்பித்ததாகக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் சுற்றுலா பயணிகளின்
குறிப்பாக சீனப் பயணிகளின் நம்பிக்கை அதிகரித்து இருப்பதாகக் கூறினார்.
“சீனாவில் இருந்து வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக
தெரிய வந்துள்ளது. சபாவில் பாதுகாப்புக்கான உத்தரவாதம்
அளிக்கப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது,” என்றார் சாஹிட் ஹமிடி.