Home நாடு ஜோகூர் பாருவில் “மூத்த ஆசிரியர்கள் கௌரவிப்பும் இலக்கிய நிகழ்வும்”

ஜோகூர் பாருவில் “மூத்த ஆசிரியர்கள் கௌரவிப்பும் இலக்கிய நிகழ்வும்”

739
0
SHARE
Ad

ஜோகூர்பாரு, நவம்பர் 26 – ஜோகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் ஓய்வு பெற்ற தமிழாசிரியர்கள், பணியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் “மூத்த ஆசிரியர்கள் கௌரவிப்பும் இலக்கிய நிகழ்வும் 2014” மிகச் சிறப்பாக பெர்மாஸ் ஜெயா, ரினோசன்ஸ் நட்சத்திர தங்கும் விடுதியில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி  நடைபெற்றது.

Teachers function JB resized

ஜோகூர் மாநிலத்தில் இந்த சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட பணிஓய்வு பெற்ற தொடக்கப்பள்ளி தமிழாசிரியர்கள் கலந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

#TamilSchoolmychoice

இந்தாண்டுக்கான ஆண்டு மலர், தொடர் இரண்டாக நேர்த்தியான முறையில் வண்ணத்தில் அச்சிடப்பட்டு வெளியீடு கண்டது. ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களைப் பற்றிய மேல்விவரங்கள் அடங்கிய ” நினைவலைகள் – தொடர் இரண்டு 2014 ” வருகை புரிந்த ஓய்வுபெற்ற தமிழாசிரியர்கள் மட்டுமல்லாது சிறப்பு வருகையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது.

JB Teachers function 3

இந்த நினைவலைகள் மலர் “ஆசிரியர் அர்ப்பணிப்பே சமுதாய முன்னேற்றம்” எனும் கருப்பொருளுடன் தாங்கி வந்துள்ளதை நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுத்தலைவர் க.கிருஷ்ணன் தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

ஆசிரியர் சமுதாயத்தின் வரலாறு பதிவு செய்யப்பட வேண்டும் எனும் நோக்கிலேயே  சிறப்புக்குரியவர்கள் விவரம், தேர்வு பெற்ற சிறுகதைகள் மற்றும் கௌரவிக்கப்படும் இலக்கியவாதி பற்றியச் செய்தி ஆகியவற்றைத்  தாங்கி மலர் வெளியீடு காண்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

JB teachers function 2

கடந்த நான்கு ஆண்டுகளாகப் புதிய உறுப்பினர்களில் இதுவரை சிறப்பு செய்யப்படாமல் இருந்தவர்களை அடையாளம் கண்டு, சங்கம் அவர்களைக் கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இம்முறை ஜோகூர் மாநில முன்னாள் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர், ரெ.சிதம்பரம் சிறப்பிக்கப்பட்டார்.

மேலும் திருமதி. ஆர். ருக்மணி வேலுசாமி, திரு பி.தேவசகாயம், திருமதி பீபி மரியம், திருமதி ஏ.செல்வமணி இலட்சுமணன், திரு. வீரசேனன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.

சிறந்த இலக்கியவாதி என்கிற கௌரவிப்பு ஜோகூர் மாநிலத் தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவரான தமிழ்மணி சி.வடிவேலுவுக்கு வழங்கப்பட்டது.

‘பாடல் திறனுடன்’ நிகழ்ச்சி முதலில் துவங்கியது. ஆர்வமுள்ள பணி ஓய்வு பெற்ற தமிழாசிரியர்கள் தங்களின் பாடும் திறனை மெய்ப்பித்தனர். அதனைத் தொடர்ந்து, ஜோகூர் சொல்வேந்தர் மன்றத்தைச் சார்ந்த அதன் தோற்றுனர், திரு. ஜே.கண்ணன் அவர்களின் விளக்கத்திற்குப் பின்னர், பணிஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பங்கேற்ற “2 நிமிட திடீர்ப் பேச்சாளர்” அங்கமும் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழுவினரின் சிறப்பு அழைப்பில், ஜோகூர் பாரு தெமெங்கோங் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் திரு. இரா.சேதுபதி, ஜோகூர் மாநில கல்வி இலாகா, இடைநிலைப்பள்ளி புறப்பாடப் பிரிவின் துணை இயக்குநர் கா.நடராஜா, ஜோகூர் மாநில உத்தமம் ஒருங்கிணைப்பாளர் இல.வாசுதேவன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

காலை 9.30 க்குத் தொடங்கிய இந்நிகழ்ச்சி, காலைச் சிற்றுண்டி, மதிய விருந்தோம்பலுக்குப் பிறகும் தொடர்ந்தது. மாலை 4.30க்கு நிறைவுற்றது. பணி ஓய்வு பெற்றபின் பல ஆண்டுகளுக்குப் பிறகு, தங்கள் பழைய நண்பர்களைக் கண்டு அளவளாவி, நகைச்சுவையைப் பகிர்ந்து, மகிழ்ச்சியான பொழுதாக இந்நிகழ்ச்சி அமைந்தது என்பதை பங்கேற்பாளர்களின் அகமும் முகமும் காண்பித்தன.

– செய்தித் தொகுப்பு : இல.வாசுதேவன்