புதுடெல்லி, நவம்பர் 26 – கடந்த சில ஆண்டுகளாக திமுகவில் இணைந்து தமிழக அரசியலைக் கலக்கி வந்த நடிகை குஷ்பு, சமீபத்தில் அந்தக் கட்சியிலிருந்து விலகினார்.
தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். இன்று புதன்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்த அவர் கட்சியில் இணைந்தார்.
திமுகவில் சமீப காலம் வரை நட்சத்திரப் பேச்சாளராக இருந்த நடிகை குஷ்பு , திமுகவில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இன்று புதன்கிழமை அவர் டில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அப்போது தமிழக காங்கிரஸ் செயலவையின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் உடனிருந்தார்.
இன்று புதுடெல்லியில் சோனியா காந்தியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் இணைவதன் மூலம் தனக்கு தன் வீடு திரும்புவது போன்ற ஒரு அமைதி மற்றும் நிம்மதி கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார். அவர் பாரதீய ஜனதா கட்சியில் சேரவிருக்கிறார் என்று முன்னர் வந்த தகவல்களை மறுத்த அவர், அது செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி என்று தெரிவித்தார்.
இவர் காங்கிரஸ் கட்சியில் இணைவது தமிழக காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் இளங்கோவன், அவரது வருகை காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதன் மூத்த தலைவர் ஜிகே வாசன் விலகியதை அடுத்து, நடிகை குஷ்பு அக்கட்சியில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு ஆதரவாக அமையும் என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர்.