Home அவசியம் படிக்க வேண்டியவை துணைப் பிரதமர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஇகா தேசியத் தலைவருக்கும் இந்திய சமுதாயத்திற்கும் அவமதிப்பு

துணைப் பிரதமர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஇகா தேசியத் தலைவருக்கும் இந்திய சமுதாயத்திற்கும் அவமதிப்பு

521
0
SHARE
Ad

கேமரன் மலை, நவம்பர் 26 – நேற்று முன்தினம் கேமரன் மலைக்கு வருகை தந்த துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின், தனது வருகைக்குப் பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

Tamil Nesan photo Palanivel behind DPM Cameron PC

அந்தப் பத்திரிக்கை சந்திப்பின் புகைப்படம் நேற்றைய தமிழ் நேசன் உள்ளிட்ட பத்திரிக்கைகளில் வெளிவந்ததைப் பார்த்த மஇகா வட்டாரங்களில் கண்டனக் குரல்கள் தற்போது பரவி வருகின்றன.

#TamilSchoolmychoice

துணைப் பிரதமர் நடுநாயகமாக அமர்ந்திருக்க, அவருக்கு இருபுறத்திலும் பகாங் மந்திரி பெசாரும், பேராக் மந்திரி பெசாரும் அமர்ந்திருக்கின்றனர். ஆனால், மஇகா தேசியத் தலைவரும், கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவோ, பின்னால் கையைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்கின்றார்.

இது ஒரு கட்சியின் தேசியத் தலைவரும், அமைச்சருமான பழனிவேலுவுக்கு மட்டும் நேர்ந்த அவமதிப்பல்ல. மாறாக, இந்திய சமுதாயத்திற்கே நிகழ்ந்துள்ள அவமதிப்பு என மஇகா தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

தேசிய முன்னணியின் மூன்றாவது பெரிய கட்சியின் தேசியத் தலைவரை, இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதிக்கும் தலைவரை, ஏதோ சாதாரண அரசாங்க அதிகாரி போல் துணைப் பிரதமரின் பின்னால் நிறுத்தி விட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துவது கட்சிக்கும், இந்திய சமுதாயத்திற்கும் நேர்ந்த அவமானம் என ஒரு மஇகா தொகுதிக் காங்கிரஸ் தலைவர் கண்டனம் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பான விவாதங்கள், மஇகாவினரிடையே தற்போது வாட்ஸ்எப் மற்றும் நட்பு ஊடகங்களின் வாயிலாக பரவலாக பரிமாறிக் கொள்ளப்பட்டு வருகின்றன.

அமைச்சர் என்பது மந்திரி பெசாரை விட பெரிய பதவி

“பழனிவேல், மத்திய அமைச்சராக இருக்கின்றார். மத்திய அமைச்சர் பதவி என்பது மாநில அளவில் மட்டுமே செல்வாக்கு கொண்ட மந்திரி பெசார் பதவியை விட பெரியது. எனவே, அவருக்கு அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மரியாதையோடு இடம் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய மரியாதை தனக்குக் கிடைக்காத இடத்தில், துணைப் பிரதமரைக் கூட மதிக்காமல் அவர் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். காரணம், அவர் இந்திய சமுதாயத்தை அரசாங்கத்தில் பிரதிநிதிக்கும் ஒரு கட்சியின் தேசியத் தலைவர். இதே இடத்தில் சாமிவேலு தேசியத் தலைவராக இருந்தால், இவ்வாறு செய்ய அவர்களுக்கு தைரியம் வந்திருக்குமா? ” என்ற ரீதியில் மஇகா தலைவர்களிடையே நட்பு ஊடகங்களில் விவாதப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

கேமரன் மலையில் அண்மையக் காலங்களில் நிகழ்ந்து வரும் இயற்கைப் பேரிடர்கள், சட்டவிரோதக் காடு அழிப்புகள், சட்டவிரோதத் தொழிலாளர்கள் போன்ற பிரச்சனைகள் தகவல் ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம் பெற்று வருகின்றன.