கடந்த 5-வது காலாண்டில் மட்டும், சன் தொலைக்காட்சி அதிபர் கலாநிதி மாறனை உரிமையாளராகக் கொண்ட ஸ்பைஸ் ஜெட் 50.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. இது கடந்த ஆண்டு, ஏற்பட்ட வருவாய் இழப்பைக் காட்டிலும் பல மடங்கு குறைவு, என்றாலும் தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிக்கும் அளவிற்கு போதுமானதாக இல்லை. இதனால் அந்நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளிலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. அதற்குத் தேவையான நிதியினை முதலீட்டாளர்களிடமிருந்து பெறுவதற்காக சமீபத்தில் முக்கிய முதலீட்டாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிகள், எதிர்கால நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்நிறுவனத்தில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட விமானிகள் தங்கள் பணியை விட்டு விலகிச் சென்றுள்ளனர். இதன் காரணமாக விமானங்களை இயக்க கால தாமதம் ஏற்படுவதாகவும், பல சமயங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.