Home இந்தியா பிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி – வைகோ

பிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி – வைகோ

692
0
SHARE
Ad

Narendra-Modi54சென்னை, நவம்பர் 28 – இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபட்சே மீண்டும் வெற்றி பெற பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறியதன் மூலம் பிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக சார்பில் சென்னை தியாகராயநகரில் பினாங்கு மாநாட்டு பிரகடன விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு  வைகோ பேசியதாவது:

“ஈழ போராட்டத்தை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு, முதலில் அவர்களை மது பழக்கம் இல்லாமல் ஒழுக்கம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும். அதற்கு பிறகு தான் நம் லட்சியத்திற்கு அவர்களை அழைத்து செல்ல முடியும்”.

#TamilSchoolmychoice

“இலங்கையில் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து கூறியதன் மூலம் பிரதமர் பதவியை அவர் களங்கப்படுத்தி விட்டார். இதுவரையிலும் எந்த பிரதமரும், இலங்கை உள்பட எந்த நாட்டு தேர்தல் என்றாலும், வெற்றி பெறுவதற்கு வாழ்த்து கூறியது இல்லை”.

“வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட தமிழர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இலங்கைக்கு ஆயுத உதவியோ, பண உதவியோ செய்ய மாட்டோம், ஆயுதங்களை விலை கொடுத்து வாங்குவதாக இருந்தாலும் நாங்கள் அவர்களுக்கு விற்பதாக இல்லை என்று அறிவித்தார். வாஜ்பாய் வழியை நரேந்திரமோடி கடைபிடிக்க வேண்டும்”.

“4 மீனவர்கள் விடுதலையில் நரேந்திரமோடி அரசு நாடகம் ஆடியது. தமிழ் ஈழம் தொடர்பாக உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு அந்தந்த நாடுகளில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதை ஐ.நா. மேற்பார்வையில் நடத்த வேண்டும். அத்துடன் தமிழக மீனவர்களை இந்திய அரசு பாதுகாக்க வேண்டும் உள்பட பல்வேறு பிரகடனங்களை பினாங்கில் நிறைவேற்றினோம்”.

“இதே தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றிய துணிச்சல் ஜெயலலிதாவுக்கு உண்டு. அதேபோன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்”.

“இதே தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம். ஆனால் அதற்கு மத்திய அரசு நமக்கு சாதகமாக இல்லை. மாறாக ராஜபக்சேவுக்கு வாழ்த்து கூறும் நிலையில் தான் உள்ளது. நம் பக்கம் நியாயம் உள்ளது. பிரிவினையை நாங்கள் கேட்கவில்லை. இழந்த சுதந்திரத்தை தான் கேட்கிறோம்”.

“கர்நாடக அரசு தமிழகத்திற்கு நதிநீர் பிரச்சனையில் வஞ்சகம் செய்து வருகிறது. மத்திய அரசு அதை தடுக்க மறுக்கிறது. தங்களுடைய மாநிலத்தில் உற்பத்தியாகும் நதிகள், தங்களுக்கே சொந்தம் என்று கூறினால், நாங்களும் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் எங்களுக்கே சொந்தம் என்று கூற வேண்டிய நிலைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள்”.

“மேலும் இந்தி திணிப்பை தமிழகத்தில் திணித்தால், தமிழகம் தனித்து போவதை தவிர வேறு வழியில்லை” என்று பேசினார் வைகோ.