கோலாலம்பூர், நவம்பர் 30 – பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், உலகச்சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருவதால், மலேசியாவிலும் பெட்ரோல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை 3 முதல் 4 காசுகள் (சென்) அளவு குறையக்கூடிய பெட்ரோல் விலையால் சரக்கு போக்குவரத்துக்கான கட்டணமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை சொற்ப அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் துறையின் பொதுச் செயலர் டத்தோஸ்ரீ அலியாஸ் அகமட் தெரிவித்தார்.
“ரோன் 95 பெட்ரோல் மற்றும் டீசலின் நவம்பர் மாத சராசரி சந்தை விலையைக் கணக்கிட்டு வருகிறோம். இதை வைத்து டிசம்பர் மாதத்திற்கான புதிய விலை நிர்ணயிக்கப்படும். சந்தை நிலவரத்திற்கேற்ப 3 அல்லது 4 காசுகள் விலை குறையக்கூடும்,” என்றார் அலியாஸ் அகமட்.
எனினும் கட்டண குறைப்பு குறித்து தனியார் சரக்கு வாகன உரிமையாளர்கள் எந்த உத்தரவாதத்தையும் அளிக்க விரும்பவில்லை.
“கட்டணத்தைக் குறைப்பதா வேண்டாமா என்பது லாரி உரிமையாளர்களின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. கட்டணங்களை குறைக்கும்படி சட்டப்படி நிர்பந்திக்க இயலாது,” என்று பான் மலேசியா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜோங் ஃபோ ஃபிட் அறிவித்துள்ளார்.