நியூயார்க், நவம்பர் 30 – ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் அதன் சந்தை மதிப்பை புதிய மைல் கல்லை நோக்கி நகர்த்தி உள்ளன. இதுவரை எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனமும் காணாத 700 பில்லியன் அமெரிக்க டாலர்களை சந்தை மதிப்பாக ஆப்பிள் பெற்றுள்ளது.
உலகின் முன்னணி தொழில் நுட்ப நிறுவனமான ஆப்பிளின் பங்குகள் விலைகள் அண்மைய நாட்களாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அதன் சந்தை மதிப்பு 701.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. எனினும் பங்குகள் ஏற்ற இறக்கங்களுடன் தொடர்ந்து மாறிக் கொண்டே இருந்தன.
ஆப்பிளின் சந்தை மதிப்பு ‘எக்சான் மொபைல்‘ (Exxon Mobil) மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் சந்தை மதிப்பை விட மிக அதிகம். அந்நிறுவனங்களின் சந்தை மதிப்பு முறையே 403 மற்றும் 394 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
ஆப்பிளின் இந்த மதிப்பு அடுத்த சில நாட்களில் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விரைவில், பண்டிகை நாட்கள் தொடங்க இருப்பதால், ஆப்பிள் அறிவிக்க இருக்கும் சலுகைகள் பயனர்களை வெகுவாக கவர வாய்ப்பு இருப்பதாக வர்த்தக ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிள் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகளும் ஆப்பிளின் வர்த்தக வளர்ச்சியில் பெரும் பங்காற்றின என்பது குறிப்பிடத்தக்கது.