இலண்டன், டிசம்பர் 1 – பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காமும் அவரது மகனும் பயணம் செய்த கார் விபத்தில் சிக்கியது. எனினும் இருவரும் காயமின்றித் தப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு லண்டனில் உள்ள ஆர்செனல் பயற்சித் திடலுக்கு வெளியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

“பெக்காமும் அவரது மகன் புரூக்ளினும் சென்ற வாகனம் மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் இருவருமே காயமின்றித் தப்பினர். மற்றொரு வாகனத்தில் இருந்த இரு நபர்களுக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. விபத்து காரணமாக பெக்காமும் அவரது மகனும் சற்றே அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டனர்,” என்றார் விபத்தை கண்ட ஒரு நபர்.
15 வயதான புரூக்ளினை அழைத்துக் கொண்டு பெக்காம் (39 வயது) காரில் வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக டெலிகிராஃப் நாளேடு தெரிவித்துள்ளது.
16 வயதுக்குட்பட்ட ஆர்செனல் அணிக்காக தற்போது விளையாடி வருகிறார் புரூக்ளின்.