கோலாலம்பூர், டிசம்பர் 1 – மலாய் மக்களுக்கான உரிமைகளும் முக்கியத்துவமும் தற்காக்கப்பட வேண்டும் என்றும் முன்னேற்றம் காண வேண்டும் என்றும் நடந்து முடிந்த அம்னோ மாநாட்டில் சிலாங்கூர் அம்னோ பேராளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நடக்கவில்லை எனில் மே 13 சம்பவத்தை விட பெரிய இனக்கலவரம் மூள வாய்ப்புள்ளது என டத்தோ இஸ்மாயில் கிஜோ என்ற அப்பேராளர் அம்னோ பொதுப்பேரவையில் பேசுகையில் எச்சரிக்கை விடுத்தார்.
மலாய் மற்றும் இஸ்லாமிய சமூகத்தின் பொருளாதார சலுகைகள் மேம்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“பல்வேறு இனங்களுக்கு மத்தியில் நிலவும் சரிசமமற்ற நிலை (வேற்றுமை), உறுதியற்ற தன்மை ஆகியவை காரணமாக மீண்டும் மே 13 போன்ற சம்பவம் நிகழக்கூடும். அதிகாரத்தில் இருப்பவர்கள் சரியானவற்றை செய்யவில்லை எனில் அத்தகைய ஒரு நிகழ்வை எதிர்கொள்ள வேண்டிய ஆபத்தில் நாம் இருக்கிறோம். மற்றவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதை மலேசிய அரசு தடுத்ததில்லை. ஆனால் சில விஷயங்கள் எல்லை மீறிக் கொண்டிருக்கின்றன,” என்றார் இஸ்மாயில் கிஜோ.
இதன் காரணமாகவே தேச நிந்தனைச் சட்டத்தை தாம் ஆதரிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இஸ்லாமிய மக்களைப் பாதுகாக்கும் விதமாக அச்சட்டத்தில் மேலும் சில கூறுகள் சேர்க்கப்பட வேண்டும் என்றார்.