Home நாடு மாணவர்களுக்கு மூன்றாவது மொழி தேவை – மொகிதீன் யாசின் வலியுறுத்து

மாணவர்களுக்கு மூன்றாவது மொழி தேவை – மொகிதீன் யாசின் வலியுறுத்து

626
0
SHARE
Ad

Tan-Sri-Muhyiddin-Yassin3கோலாலம்பூர், டிசம்பர் 1 – மாணவ சமுதாயம், குறிப்பாக மலாய் மாணவர்கள் மலாய், ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவதாக வேறொரு மொழியிலும் தேர்ச்சி பெற வேண்டும் என துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் வலியுறுத்தியுள்ளார். அம்னோவின் துணைத் தலைவரான அவர், அந்த மூன்றாவது மொழியாக மாண்டரின் மொழியை பரிந்துரைத்துள்ளார்.

தேசியப் பள்ளிகளில் மூன்றாவது மொழியைக் கற்பிக்க புதிதாக 30 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கலாம் என்றும் கல்வி அமைச்சரான அவர் தெரிவித்தார்.

“அம்னோ பேராளர்கள் மற்றும் நிதியமைச்சரின் ஆதரவோடு புதிய ஆசிரியப் பணி இடங்களை உருவாக்கி, மூன்றாம் மொழி பாடத்திட்டக் கொள்கையை நாம் அமல்படுத்த முடியும் என நம்புகிறேன். மூன்றாவது மொழியைக் கற்பதன் மூலம் மலாய், சீன, இந்திய மாணவர்கள் ஒருவரையொருவர் மேலும் நன்கு புரிந்து கொள்ள முடியும். தற்போதைய கல்வி அமைப்பில் மாணவர்கள், மூன்றாவது மொழியை விருப்பப் பாடமாக தேர்வு செய்து படிக்கலாம் என்றாலும், மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே அப்பாடத்தை தேர்வு செய்கின்றனர்,” என்றார் மொகிதீன் யாசின்.

#TamilSchoolmychoice

தேச ஒற்றுமையை வலுப்படுத்த மலாய் மொழியை அனைவரும் கற்க வேண்டியது முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், தேசியப் பள்ளிகளில் மலாய் மொழியை போதிக்கும் ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்தும் பொறுப்பு தம்மிடம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“அடுத்த பொதுத்தேர்தலில் தற்போதுள்ள 133 நாடாளுமன்றத் தொகுதிகளில் 2 விழுக்காடு தொகுதிகளை இழந்தாலும் நாம் தோற்க நேரிடும். ஆனால் 5 விழுக்காடு கூடுதல் தொகுதிகளைப் பெற்றால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை மீட்டெடுக்க இயலும்,” என்றார் மொகிதீன் யாசின்.