துபாய், டிசம்பர் 1 – உலக அளவில் சுற்றுலா செல்ல சிறந்த நாடாகக் கருதப்படும் துபாயில், 32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் அதி நவீன விமான நிலையம் ஒன்றை அமைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
துபாயின் அனைத்துலக விமான நிலையம், உலகின் மிகவும் பரபரப்பான இரண்டாவது விமான நிலையமாக இயங்கி வருகின்றது. இந்நிலையில், அந்நாட்டு அரசு உலகின் மிகப் பெரிய மற்றும் பல்வேறு அதிநவீன வசதிகள் கொண்ட புதிய விமான நிலையம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
தற்போதய விமான நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘துபாய் வேர்ல்ட் சென்ட்ரல்’ (Dubai World Central) பகுதியில் மற்றோரு புதிய விமான நிலையம் அமைக்கப்பட இருக்கின்றது. இந்த விமான நிலையத்தில் சுமார் நான்கரை கிலோ மீட்டர் நீளமுள்ள 5 ஓடுபாதைகள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2020-ல் இந்த புதிய விமான நிலையத்தின் பணிகள் முற்று பெரும் என்று கூறப்படுகின்றது. மேலும், தற்போதுள்ள அனைத்துலக விமான நிலையத்தை 7.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் விரிவுப்படுத்தும் பணிகளும் விரைவில் துவங்க உள்ள குறிப்பிடத்தக்கது.