புதுடெல்லி, டிசம்பர் 1 – எபோலா நோய் உலக நாடுகளை நடுநடுங்க வைத்துள்ளதால், பல நாடுகள் ஆப்பிரிக்க மக்களுக்கு விசா வழங்க மறுத்துள்ளன. இந்நிலையில், இந்தியா அரசு, ‘எபோலா நோய் தாக்குதல் இல்லை’ (No-Ebola Certificate) என்ற சான்றிதழ் கொண்டுவந்தால் மட்டுமே எபோலா பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுவர் என்று அறிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியா வந்த லைபீரிய நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவரை பரிசோதனை செய்தபோது, அவருக்கு எபோலா அறிகுறி இருந்ததை இந்திய அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனையடுத்து அவருக்கு இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் எபோலா குறித்து இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜேபி நாட்டா கூறுகையில், “எபோலா நோய்க்கு சிகிச்சை பெற்று மீண்டவர்கள், அந்நாட்டு சுகாதாரத் துறையிடம் இருந்து சான்றிதழ் பெறாமல் இருந்து வருகின்றனர். இது நமக்கு மிகுந்த கவலையளிக்கின்றது. அதனால் எபோலா நோய் தாக்குதல் உள்ள நாடுகளில் இருந்து, இந்தியாவிற்குள் வரும் பயணிகள் சம்பந்தப்பட்ட நாட்டின் சுகாதார அமைச்சகத்தில் இருந்து, எபோலா நோய் தாக்குதல் இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.
எபோலா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள், மருத்துவமனையில் இருந்து வெளியேறிய 90 நாட்கள் வரை இந்தியாவிற்குள் வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிக்கை, நைஜீரியா, கானா, நியமி, ஐவரிகோஸ்ட், செனகல் ஆகிய நாடுகளில் உள்ள தூதரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.