ஜெனீவா, ஜூன் 12 – எபோலா நோய் கட்டுக்குள் இருந்த கினி, சியரா ஆகிய நாடுகளில் மீண்டும் எபோலா நோய் பரவி வருவது அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளான கினி, சியரா, லைபீரியா ஆகிய நாடுகளில் கடந்த 2013-ஆம் ஆண்டு எபோலா நோய் பரவியது கண்டறியப்பட்டது.
உலகுக்கே அச்சுறுத்தலாக விளங்கிய இந்நோய்க்கு இதுவரை 11,158 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத எபோலாவால் 27,237 பேர் பாதிப்புக்கு ஆளாகினர்.
இந்த நோய் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. எபோலா பாதிப்புள்ள நாடுகளில் வசிப்போர் தாயகம் திரும்பும்போது, அவர்களுக்குப் பரிசோதனை செய்தபின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
எபோலா பரிசோதனை நிலையங்கள், தனிச் சிகிச்சை பிரிவுகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. நோய் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளான கினி, சியரா, லைபீரியா ஆகிய நாடுகளில் கடும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. நோய் தாக்கம் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
எபோலாவால் இறந்தவர்களைப் புதைக்க அரசு அனுமதி பெறவேண்டும். தகவல் தெரிவிக்காமல் இறுதிச் சடங்கு நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். எபோலா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் நீண்டகாலமாக மூடப்பட்டன.
இதுபோன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பின், இந்த நாடுகளில் எபோலா கட்டுக்குள் வந்தது. எபோலா இல்லாத நிலையை லைபீரியா கடந்த மாதம் அறிவித்தது.
எபோலாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து, மக்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில், கினியா, சியரா ஆகிய நாடுகளில் மீண்டும் எபோலா பரவி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இருவாரங்களில் கினியாவில் 16 பேருக்கும், சியராவில் 15 பேருக்கும் எப்போலா அறிகுறி இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கினி தலைநகர் கோனாகியில் எபோலா இல்லை என்றிருந்த நிலையில், அங்கு 2 பேர் எபோலாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கிந்தியா பகுதியில் 3 பேருக்கு எபோலா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. கினி, சியராவில் எபோலா மீண்டும் பரவி வருவது அங்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.