புதுடெல்லி, ஜூன் 12 – வங்கதேச அரசு வழங்கிய ‘விடுதலைப் போர் கவுரவ விருதை’ முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சார்பில் பெற்ற பிரதமர் மோடி, நேற்று அவரிடம் சமர்ப்பித்தார். 1971-ல் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெறுவதற்காக வங்கதேசம் போராட்டம் நடத்தியது.
இதற்கு ஆதரவு தெரிவித்து அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வாஜ்பாய், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி, தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதைப் பாராட்டும் விதமாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு விடுதலைப் போர் கவுரவ விருதை வழங்க வங்கதேசம் முடிவு செய்தது. ஆனால், தற்போது முதுமை காரணமாக வாஜ்பாய் நடக்க முடியாமல் உள்ளார்.
இதையடுத்து, வங்கதேசம் நாட்டுக்கு கடந்த வாரம் 2 நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றிருந்த பிரதமர் மோடி, வாஜ்பாயின் சார்பில் அந்த விருதைப் பெற்றார்.
பங்காபாபன் நகரில் நடைபெற்ற சிறப்பான விழாவில் பிரதமர் மோடியிடம் விடுதலைப் போர் கவுரவ விருதை வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது வழங்கினார்.
இந்நிலையில், வங்கதேசப் பயணத்தை முடித்து நாடு திரும்பிய பிரதமர் மோடி, புதுடெல்லியில் உள்ள வாஜ்பாயின் இல்லத்துக்கு நேற்று சென்று அவரைச் சந்தித்தார்.
அப்போது, வங்கதேசம் அளித்த விருதை வாஜ்பாயின் குடும்ப உறுப்பினர்களிடம் பிரதமர் மோடி சமர்பித்தார். இந்த நிகழ்ச்சியின் போது, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடன் இருந்தார்.