புதுடெல்லி, நவம்பர் 30 – சீனாவின் மிகப்பெரும் இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா, இந்தியாவில் பெரும் முதலீடுகளுடன் களமிறங்கத் தயாராகி வருகின்றது.
இந்தியாவிற்கு வர்த்தக பிரதிநிதிகள் 100 பேருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா, எதிர்கால இந்தியாவின் வர்த்தக வளர்ச்சி குறித்தும், இணைய வர்த்தகம் குறித்தும் செய்தியாளர்களுடன் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார்.
இந்தியாவில் இணைய வளர்ச்சி குறித்து அவர் கூறியதாவது:-
“இந்தியாவில் இணையத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்திய இளைஞர்கள். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது. இந்தியாவில் தற்சமயம் இணைய வர்த்தகம் சீனாவை விட குறைவாக இருந்தாலும், 2016-ம் ஆண்டிற்குள் பல மடங்கு வளர்ச்சியைப் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.”
“இந்திய இணைய வளர்ச்சியைக் கணக்கிட்டு இந்தியாவில் அதிக முதலீடுகளை ஏற்படுத்துவதற்கு தயாராகி வருகின்றோம். இந்திய தொழில் முனைவோர் மற்றும் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கான சரியான தருணம் இது தான்” என்று அவர் கூறியுள்ளார்.
சீனாவில் அலிபாபா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாகப் பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவில் கடந்த வருடத்திற்கான வருவாய் வெறும் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே.
எனினும் அலிபாபா இந்தியாவில் அதிக முதலீடுகளை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணம் எதிர்வரும் 2016-ம் ஆண்டிற்குள் இந்திய இணைய வர்த்தகத்தின் வருவாய் ஆண்டிற்கு 15 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே அலிபாபா இந்திய வர்த்தகத்தை குறி வைத்து களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.