Home நாடு “தலையாட்டி பொம்மைகளாக மாற்றப்பட்ட தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள்” – வேதமூர்த்தி சாடல்

“தலையாட்டி பொம்மைகளாக மாற்றப்பட்ட தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள்” – வேதமூர்த்தி சாடல்

603
0
SHARE
Ad
waytha - 450  x 225
பி.வேதமூர்த்தி, ஹிண்ட்ராப் தலைவர்

கோலாலம்பூர், நவம்பர் 30 – தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகள் அனைத்தும் தலையாட்டி பொம்மைகளாக மாற்றப்பட்டுவிட்டதாக ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவர் வேதமூர்த்தி சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தேச நிந்தனைச் சட்டத்தை நிலை நிறுத்துவதாக அறிவித்துள்ளதன் மூலம் பிரதமர் டத்தோஸ்ரீ  நஜிப் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

“தேச நிந்தனைச் சட்டம் நீக்கப்படும் என்று கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னரே அறிவித்திருந்தார் பிரதமர் நஜிப். பல பன்னாட்டு கூட்டங்களிலும் நேர்காணல்களிலும் கூட இப்படி கூறியவர், தற்போது திடீரென தடம் புரண்டுள்ளார்.  ஒவ்வொரு மேடையிலும் ‘வாக்குறுதி நிறைவேற்றப்படும்’ என்று கையை உயர்த்தி முழங்கும் பிரதமர், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டார்,” என்று வேதமூர்த்தி விமர்சித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தேச நிந்தனைச் சட்டத்தை நிலை நிறுத்துவதாக அறிவித்துள்ளதன் மூலம் பிரதமர் நஜிப் அடிப்படைத் தவறிழைத்திருப்பதாகக் கூறியுள்ள அவர், இச்சட்டத்தை நிலைநிறுத்தும் என்கிற முடிவை, அம்னோவின் உச்சமன்றக் கூட்டத்திலோ தேசிய முன்னணியின் பொதுப் பேரவையிலோ எடுக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

“தேச நிந்தனைச் சட்டம் தொடர்ந்து பராமரிக்கப்படுவதுடன் அது, இன்னும் வலிமைப்படுத்தப்படும் என்று அம்னோ கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டில் அறிவித்துள்ளார் பிரதமர். இதன் மூலம் தேசிய முன்னணியில் உறுப்பியம் பெற்றுள்ள இதர 12 கட்சிகளையும் ஒரே நொடியில் ‘தலையாட்டி பொம்மை’களாக மாற்றி விட்டார். தன் சொந்த அணியில் இருக்கின்ற உறுப்புக் கட்சிகளைக்கூட கலந்து ஆலோசிக்காமல் இப்படி எதேச்சாரமாக நடந்து கொள்ளும் தன்மைக்கு எதிராக அந்த அணியின் ஏனையக் கட்சிகள் துணிந்து குரல் எழுப்ப வேண்டிய தருணம் இது,” என்று வேதமூர்த்தி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சில பிரச்சினைகளுக்கு சாத்வீகமான, ராஜதந்திர முறையில் தீர்வு காண முயற்சி செய்ய வேண்டுமே அல்லாமல் கண்ணை மூடிக் கொண்டு சட்ட நடவடிக்கை என்று முழக்கமிடுவது ஆகாத காரியம் என்றும்  வேதமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.