Home இந்தியா சஹாரா தலைவர் சுப்ரதா ராயின் குறிப்பேட்டில் அமித் ஷாவின் பெயர் – திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

சஹாரா தலைவர் சுப்ரதா ராயின் குறிப்பேட்டில் அமித் ஷாவின் பெயர் – திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

643
0
SHARE
Ad

amit-shahபுதுடெல்லி, டிசம்பர் 2 – சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சஹாரா தலைவர் சுப்ரதா ராயின் குறிப்பேட்டில் (டைரி) பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் பெயர் இடம்பெற்றுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாற்றியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, திரிணமூல், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசினார்.

அப்போது, சாரதா நிதி நிறுவன விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி அரசு மீது அவர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமித் ஷா மீது திரிணமூல் காங்கிரஸ் திங்கள்கிழமை ஒரு குற்றச்சாட்டை எழுப்பியது.

#TamilSchoolmychoice

அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவையில் கோஷங்களை எழுப்பியபடி அவையின் மையப் பகுதிக்குச் சென்றனர். சிவப்பு நிற குறிப்பேட்டின் பிரதிகளை அவர்கள் எடுத்துக் காட்டினர்.

saharaசிறையில் அடைக்கப்பட்டுள்ள சஹாரா நிறுவனத் தலைவர் சுப்ரதா ராயின் குறிப்பேடு அது என்று கூறிய அவர்கள், அதில் அமித் ஷாவின் பெயர் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரத்தில் சிபிஐ என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை பிரதமர் நரேந்திர மோடி விளக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கிரீட் சோமையா பேசுகையில்,”சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் திரிணமூல் காங்கிரஸின் 12 தலைவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு ஒத்துழைப்பதில்லை“ என்று குற்றம்சாட்டினார். அப்போது திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அவை மதிய உணவு இடைவேளை வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவையில், சுப்ரதா ராயின் குறிப்பேட்டில் அமித் ஷாவின் பெயர் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தை திரிணமூல் நாடாளுமன்ற உறுப்பினர் டெரக் ஓ பிரையன் எழுப்ப முயன்றார்.

அப்போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாரதா நிதி நிறுவன மோசடி குறித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர், அமித் ஷா மீதான குற்றச்சாட்டை எழுப்புவதற்கு அனுமதி தரப்படாததைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

naiduஇது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில், “கொல்கத்தாவில் எங்கள் கட்சித் தலைவர் அமித் ஷாவின் பொதுக் கூட்டத்துக்கு கிடைத்த மக்கள் வரவேற்பைக் கண்டு அவர்கள் கவலை அடைந்துள்ளனர். இதுவே நாடாளுமன்றத்தில் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டதற்குக் காரணம்” என்றார்.

இந்நிலையில், பாஜக தேசியச் செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறுகையில், “திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை”.

“மேற்கு வங்கத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சாரதா நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களைப் பாதுகாக்கவே திரிணமூல் காங்கிரஸ் முயற்சிக்கிறது” என்று கூறினார்.