பெர்லின், டிசம்பர் 2 – லூப்தான்சா விமான நிறுவனத்தின் விமானிகள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, சுமார் 1350 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. விமானிகளின் போராட்டம் இன்றும் தொடரும் என்று கூறப்படுகின்றது.
ஜெர்மனியின் முக்கிய விமான நிறுவனமான லூப்தான்சாவின் விமானிகள், ஓய்வூதிய பயன்கள் தொடர்பாக விமான நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை பயனளிக்காத நிலையில், ஓய்வூதிய கோரிக்கையை முன்வைத்து இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று தொடங்கிய போராட்டம் இன்றும் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் முதற்கட்டமாக, நேற்று ஐரோப்பிய நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களை இயக்க மறுத்துள்ள அவர்கள், இன்று நீண்ட தூரம் செல்லும் விமானங்களை இயக்கப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளனர்.
விமானிகளின் போராட்டத்தினால், லூப்தான்சாவில் மொத்தம் உள்ள 2800 விமானங்களில் 1350 விமானங்கள் இன்று நள்ளிரவு வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, சுமார் 150,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் மட்டும் லூப்தான்சா நிறுவன விமானிகள், 9-வது முறையாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.