கோலாலம்பூர், ஜனவரி 19 – ஜெர்மன் விமானப் போக்குவரத்து நிறுவனமான லூப்தான்சா, எதிர்வரும் மார்ச் மாதம் 29-ம் தேதி முதல் ஜெர்மனியின் முக்கிய நகரமான பிராங்க்ஃபர்ட்டிலிருந்து கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவையை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக லூப்தான்சா மலேசியப் பிரிவின் பொது மேலாளர் பாரஸ் நீகூ கூறுகையில்,
“பிராங்க்ஃபர்ட் – கோலாலம்பூர் வழித்தடங்களுக்கு ஏர்பஸ் 340-300 விமானங்கள் இயக்கப்படும்.மேலும், இதற்கான புதிய பிரிமியம் எகனாமி வகுப்பு ஜூன் மாதம் 3-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படும். வாடிக்கையாளர்களின் தொடர் கோரிக்கைகள் மற்றும் மலேசிய வர்த்தகத்தில் உள்ள எதிர்கால சிறப்புகளை கருதி, இந்த வழித்தடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், “பிராங்க்ஃபர்ட் – கோலாலம்பூர் வழித்தடங்களை வரவேற்றுள்ள மலேசியா விமான நிலைய மேலாண்மை இயக்குனர் டத்துக் பேட்லிஷாம் கசாலி, இது தொடர்பாக கூறுகையில், “மார்ச் மாதம் 29-ம் தேதி பிராங்க்ஃபர்ட் நகரிலிருந்து கோலாலம்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட இருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.”
“தினசரி விமானங்கள் இயக்கப்பட இருப்பதும், பிரிமியம் எகனாமி வகுப்புகள் அறிவிக்கப்பட இருப்பதும் ஐரோப்பா மற்றும் மலேசியாவின் விமான வழித்தடங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. இதன் மூலம் விமான நிறுவனங்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது” என்றும் பாரஸ் நீகூ கூறியுள்ளார்.