Home நாடு புத்ராஜெயாவில் இந்துக் கோவில்: சர்ச்சையாக்க வேண்டாம் – தெங்கு அட்னான் வலியுறுத்து

புத்ராஜெயாவில் இந்துக் கோவில்: சர்ச்சையாக்க வேண்டாம் – தெங்கு அட்னான் வலியுறுத்து

946
0
SHARE
Ad

adnan_mansor_reutersகோலாலம்பூர், ஜனவரி 19 – புத்ராஜெயாவில் இந்துக் கோவில் நிர்மாணிக்கப்பட்டு வருவது குறித்து மலாய் உரிமை அமைப்பான பெர்காசா கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமில்லை என கூட்டரசு அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் கூறியுள்ளார்.

இந்த கட்டுமானப் பணிக்கு வெகு காலத்திற்கு முன்பே அனுமதியளிக்கப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தற்போது இதுகுறித்து கேள்வி எழுப்பி சர்ச்சையாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

“புத்ராஜெயாவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கம் காரணமாக அங்கு ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயம் கட்ட அனுமதிக்கப்பட்டது. கோவில் மட்டுமல்லாது, அனைத்து நவீன வசதிகளும் கொண்ட பல்நோக்கு அரங்கு மற்றும் நூலகம் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன. இவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இது இந்துக்களுக்கானது மட்டுமல்ல, அனைவரின் பயன்பாட்டிற்குமானது,” என்றார் தெங்கு அட்னான்.

#TamilSchoolmychoice

முன்னதாக புத்ராஜெயாவில் இந்துக் கோவில் நிர்மாணிக்கப்படுவது குறித்து பெர்காசாவின் இளையர் பிரிவு தலைவர் இர்வான் ஃபஹ்மி டெரிஸ், கடந்த 8-ம் தேதி கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலாய்க்காரர்கள் பகுதியில் இந்த இந்துக் கோவில் அமைந்திருப்பதாக அவர் புகார் எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் அவருக்குப் பதிலளித்துள்ள தெங்கு அட்னான், “இதற்கு முன்னர் நிறைய கோவில்களை நிர்மாணித்துள்ளோம். எனவே புத்ராஜெயாவில் மேலும் ஒரு கோவிலை நிர்மாணிப்பதால் ஒன்றும் ஆகிவிடாது” என்று குறிப்பிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.