பெர்லின் – பிராங்பர்ட்டில் இருந்து பெல்கிரேட் சென்ற ஜெர்மன் நாட்டு லூப்தான்சா விமானத்தில், நேற்று பயணி ஒருவர் திடீரென விமானத்தில் கதவருகே சென்று வித்தியாசமாக எதையோ செய்ய முயன்றதால், உடனடியாக பணியாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இது குறித்து அவ்விமான நிறுவனத்தின் சார்பில் அதன் பிரதிநிதி ஆண்ட்ரியாஸ் பார்டெல்ஸ் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானத்தில் பயணி ஒருவர் திடீரென எழுந்து, கதவருகே சென்று எதையோ செய்ய முயற்சி செய்துள்ளார். அவரை விமானப் பணியாளர்களும், மற்ற பயணிகளும் தடுத்து நிறுத்தியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விமானம் பெர்கிரேடை அடைந்தவுடன் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அது சாதாரண கதவு தான். கண்டிப்பாக அதை விமானம் பயணித்துக் கொண்டிருக்கும் போது திறக்க இயலாது. அது காக்பிட்டின் (விமானிகள் அறையின்) கதவு கிடையாது” என்றும் ஆண்ட்ரியாஸ் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த சம்பவத்தால் விமானத்தின் பாதுகாப்பு எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும், விமானம் பத்திரமாக பெர்கிரேடில் தரையிறங்கியது என்றும் ஆண்ட்ரியாஸ் தெரிவித்துள்ளார்.