Home வணிகம்/தொழில் நுட்பம் லூப்தான்சா விமானிகள் இன்று வேலை நிறுத்தம் – நெடுந்தொலைவு சேவைகள் பாதிப்பு!

லூப்தான்சா விமானிகள் இன்று வேலை நிறுத்தம் – நெடுந்தொலைவு சேவைகள் பாதிப்பு!

639
0
SHARE
Ad

Lufthansa

பிராங்க்பர்ட், செப்டம்பர் 30 – ஐரோப்பிய விமான நிறுவனமான லூப்தான்சாவின் விமானிகள் இன்று வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி விமான நிறுவனமான லூப்தான்சாவின் விமானிகள், விமானிகளுக்கான முன்கூட்டிய ஒய்வு விதிகள் மீது கடும் சர்ச்சையை எழுப்பி உள்ளனர்.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக அவர்கள் தொடர் வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

விமானிகளின் தரப்பு இந்த வேலைநிறுத்தம் பற்றி கூறுகையில், “தற்போது நடைமுறையில் உள்ள முன்கூட்டிய ஒய்வு வயதான 55-ஐ அதிகரிக்க வேண்டும். விமானிகளின் ஓய்வூதியப் பணத்தை மறுமுதலீடு செய்வது தொடர்பாக லூப்தான்சாவின் புதிய திட்டம் கைவிடப்பட வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

விமானிகளின் வேலை நிறுத்தம் காரணமாக இன்று பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் உள்நாட்டு நேரப்படி காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை உள்ள நெடுந்தொலைவு சேவைகள் நிறுத்தப்படுகின்றன. இந்த வேலை நிறுத்தத்தால் ஏர்பஸ் ஏ-380, ஏ-330, ஏ-340 மற்றும் போயிங் 747 போன்ற விமான சேவைகள் பாதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

சமீப காலங்களில் மூன்று முறை இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற விமானிகள் வேலைநிறுத்தம் லூப்தான்சாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஜெர்மன்விங்சை கடுமையாக பாதித்தது.

இதே போன்று மூன்றாவது முறை நடைபெற்ற வேலைநிறுத்தம் ஜெர்மனியின் முக்கிய விமான நிலையமான மியுனிச்சின் பயன்பாட்டினை முடக்கியது.

எனினும் லூப்தான்சா நிர்வாகம், வேலை நிறுத்தம் பற்றிய எந்தவொரு பயனுள்ள சமரசத்தையும் அறிவிக்காததால் கூடுதலான தொழில்துறை நடவடிக்கையில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் விமானிகளின் தொழிற்சங்கம் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.