கோலாலம்பூர், செப்டம்பர் 30 – அண்மையில் பெரோடுவா நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘ஏக்சியா’ (Axia) ரக புதிய கார்களுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பினால், ஆண்டு இறுதிக்கும் 30,000க்கும் மேற்பட்ட கார்களை விற்பனை செய்ய முடியும் என அந்நிறுவனம் நம்பிக்கைக் கொண்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி துணைப் பிரதமர் ஏக்சியா காரை அறிமுகப்படுத்தி பார்வையிடுகின்றார்..
கடந்த ஆகஸ்ட் 15 முதற்கொண்டு ஏக்சியா கார்களுக்கான 13,500 முன் பதிவுகளை இதுவரை பெற்றிருப்பதாக, பெருசஹான் ஆட்டோமோபில் கெடுவா சென்டிரியான் பெர்ஹாட் (Perusahaan Otomobil Kedua Sdn Bhd) என்ற முழுப்பெயர் கொண்ட பெரோடுவா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ அமினார் ரஷிட் சாலே தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு 500 முதல் 600 முன்பதிவுகள் வரை தங்களுக்குக் கிடைப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் அவர், இதன் காரணமாக, இந்தக் கார்களுக்காக காத்திருக்கும் காலம் இரண்டு மாதங்கள் வரை இருக்கலாம் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஏக்சியா ரக காரின் தோற்றம்…
சிறந்த எரிபொருள் சேமிப்பைக் கொண்டுள்ள இந்தக் கார் நான்கு விதமான வெவ்வேறு ரகங்களில் 24,600 ரிங்கிட் முதல் 42,530 ரிங்கிட் வரையிலான விலைகளில் கிடைக்கின்றது.
ஒரு லிட்டர் பெட்ரோல் எரிபொருளில் 21.6 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யக் கூடிய வசதியை இந்தக் கார் கொண்டிருக்கும்.
புதிய ஏக்சியா ரக காரின் வரவினால், பெரோடுவாவின் பழைய ரகக் காரான ‘விவா’ (Viva) வர்த்தக ரீதியாக நிறுத்தப்படாது என்றும் வாடிக்கையாளர்களின் ஆதரவு இருக்ககும் வரை விவா கார் தொடர்ந்து தயாரித்து வெளியிடப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பெரோடுவா தனது கார்களை தற்போது ஏழு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தாலும், புதிய ரக ஏக்சியா கார்களை ஏற்றுமதி செய்வதா என்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் சக்தியை மிச்சப்படுத்தும் தொழில் நுட்பத்துடன் தனது இணை நிறுவனமான டைஹாட்சு நிறுவனத்தின் (Daihatsu Motor Co) ஆதரவுடன் ஏக்சியா கார்களை பெரோடுவா தயாரித்துள்ளது.
சூழியலுக்கு சாதகமான நவீன அம்சங்களுடன் இந்தக் கார் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய காரின் வரவினால், பெரோடுவா நிறுவனத்தின் சந்தை வர்த்தகம் மேலும் விரிவடைந்து அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.