கோலாலம்பூர், ஜனவரி 19 – பேஸ்புக், டிவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களில் பெரும்பாலான நடிகர்கள், நடிகைகள் இணைந்து தங்களது ரசிகர்களுடன் நேரடியான தொடர்பில் உள்ளனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமாரும் பேஸ்புக்கில் கணக்கு திறந்திருப்பதோடு மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து தனது சினிமா வாழ்க்கை பற்றிய சுவையான தகவல்களை ரசிகர்களிடம் பகிர்ந்து வருகின்றார்.
தமிழக சினிமாவில் ஒழுக்கத்துடனும், காலம் தவறாமையிலும் முன்னுதாரணமாக இருப்பவர் சிவக்குமார் என்பது உலகறிந்த ஒன்று.
அதுவே ஒரு தனித்துவமாகக் கருதப்பட்டு, சினிமாவில் சாதிக்க நினைக்கும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு “சினிமாவுல இருந்தாலும் சிவக்குமார் மாதிரி ஒழுக்கமா இருங்க” என்று பெற்றோர்களால் அறிவுரை கூறப்படும் அளவிற்கு பெருமை வாய்ந்தவராக உள்ளார்.
இந்நிலையில், சிவக்குமார் நேற்று இட்ட இடுகை ஒன்றில் தான் மலேசியாவில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட அனுபவம் குறித்து தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“1996 -மே மாதம் 31-ந்தேதி –கோலாலம்பூர் மலேசிய ஆயுள் காப்பீட்டுக் கழகப் பிரதிநிதிகளின் சங்கம்( NAMLIA) தனது 17- வது மாநாட்டினை தொடங்கியது. மலேசியாவில் 90,000 பிரதிநிதிகள் உலக அளவில் 21 நாடுகளிலிருந்து வி.ஐ.பிக்கள் – நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.”
“என்னோடு மலேசியாவிற்கு முதன்முதலாக வந்த நண்பர் – பயணக் களைப்புடன் நடு நிசி தாண்டிய கலை நிகழ்ச்சிகள் பார்த்த களைப்பில் – இந்திய நேரம் காலை 10.30 மணி வரை உறங்கிவிட்டார்.”
“மலேசிய நேரம், இந்திய நேரத்தைவிட 2.30 மணி கூடுதல் என்பதை மறந்துவிட்டார். அடித்துப் பிடித்து அவர் தயாரான போது மலேசிய நேரம் பிற்பகல்1.30… வேகமாக டைனிங் ஹால் ஓடினோம்.மாநாட்டு விருந்தினர் சாப்பிட்டு முடித்து விட்டிருந்தனர். பொறுமையற்று 30 மாடி லிப்டில் இறங்கி, சாலையைக் கடந்து ஓடி, விழா நடக்கும் ஓட்டலுக்குள் நுழைந்து மீண்டும் 50 மாடி… லிப்டில் பயணித்து, மூச்சிறைக்க என் ஹாலுக்குள் கால் வைத்தபோது சரியாக 2.00 மணி.”
“ஒவ்வொருவரும், கடின உழைப்பால் உயர்ந்த அனுபவங்களைப் பற்றி பேசினோம். நேரம் தவறாமை பற்றிப் பேசிய நான் – காலத்தின் அருமை கருதி- இன்று பகல் நான் உணவு அருந்தாமல் ஓடிவந்தேன் என்றேன்.எல்லோருக்கும் அதிர்ச்சி.ஒரு சம்பவம் சொன்னேன்.”
“முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன் அமெரிக்காவில் ஒரு விழா முடிந்து விருந்தில் கலந்து கொண்டார். மது அருந்தச் சொன்னார்கள். பழக்கமில்லை என்றார். லேசாக நாக்கில் சுவைத்து விட்டுத் தாருங்கள் என்றனர்.”
‘எங்கள் நாட்டில் கொஞ்சம் கற்புடையவள் – நிறைய கற்புடையவள் என்ற பேதமில்லை. கற்புடையவள்- கற்பிழந்தவள் என்றுதான் சொல்வார்கள். ஒரு சொட்டு நாக்கில் பட்டாலும் நான் குடிகாரன்தான்’ என்றார்.
“அதே போல் 2.00 மணி நிகழ்ச்சிக்கு 2.10 க்கு வந்தாலும் லேட்தான் 2.02 நிமிடத்துக்கு வந்தாலும் லேட்தான் என்றேன். கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது.” இவ்வாறு சிவக்குமார் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
படங்கள்: பேஸ்புக்