கோலாலம்பூர், ஜனவரி 19 – ஆப்பிள் நிறுவனம் மிக எளிதான வர்த்தகப் பறிமாற்றங்களுக்கு, பயனர்களின் கை ரேகைகளை ஐ-கிளவுட் -ல் சேமிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 5எஸ்-ல் டச் ஐடி (Touch ID) என்ற தனித்துவமான அடையாள முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பயனர்கள், தங்கள் கை ரேகையை கொண்டு ஐபோனை இயக்க முடியும். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஆப்பிள் பே’ (Apple pay) பரிவர்த்தனைகளிலும் இதனை ஆப்பிள் செயல்படுத்தியது.
இந்நிலையில், ஆப்பிள் பயனர்களின் கை ரேகைகளை ஐ-கிளவுட்டில் சேமிப்பதன் மூலம், ஆப்பிள் அல்லாத முனையங்களில் கை ரேகைகளுக்கான அடையாளங்கள் தேவைப்படுகின்ற பொழுது, ஐ-கிளவுட் மூலம் அதனை செயல்படுத்த முடியும். ஐ-கிளவுட் என்பது அனைவருக்கும் பொதுவான தரவு தளமாக இருப்பதால், தகவல் திருட்டுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக பயனர்களால் கருதப்படுகின்றது.
அதற்கு முக்கிய காரணம், கடந்த ஆண்டு, ஹாலிவுட் நடிகைகள் பலர் ஐ-கிளவுட்டில் சேமித்த அந்தரங்கப் படங்கள், தகவல் திருடர்களால் ஹேக் செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
பயனர்களின் இந்த அச்சத்தை உணர்ந்துள்ள ஆப்பிள், ஐ-கிளவுட்டில் சேமிப்படும் கைரேகைகளின் பாதுகாப்பு குறித்த ‘குறியாக்க முறைகள்’ (Encryption Standard)-ஐ விளக்கி உள்ளது. மேலும், தகவல் திருடர்களிடமிருந்து ஐ-கிளவுட் பாதுகாக்கப்படுவதற்கான பல முன்னேற்பாடுகளையும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.