கிள்ளான், ஜனவரி 19 – பிறந்தநாள் நிகழ்வையொட்டி நடைபெற்ற இரவு நேர காமக் களியாட்டத்தின்போது, போதைப் பொருள் பயன்படுத்தியதாக 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் அனைவரும் 20 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு குற்றம் சாட்டப்பட்டனர்.
கடந்த 11ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் கிள்ளானில் உள்ள ஒரு தங்கும் விடுதி அறையில் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் காமக் களியாட்டமும் அரங்கேறியதாகக் கூறப்படுகிறது. அப்போது 29 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 13 பேரிடம் 0.68 கிராம் கேட்டமைன், 0.75 கிராம் எரிமைன் மாத்திரைகள் மற்றும் 5.01 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
மேலும் 5 லிட்டர் ‘கெத்தும்’ பழரசம் (ketum juice) இருந்தது தொடர்பாகவும் இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஒரு நபர் உத்தரவாதம் மற்றும் 6 ஆயிரம் வெள்ளி பிணைத்தொகையின் பேரில் இவர்களுக்குப் பிணை வழங்கலாம் என மாஜிஸ்திரேட் மரியா மாரன் அப்துல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் ‘கெத்தும்’ பழரசம் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் மேலும் 2 ஆயிரம் வெள்ளி பிணைத் தொகை செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.