பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 18 – அரசியல் களம் காண்பது என முடிவெடுத்தால் நிச்சயமாக பக்காத்தானில் சேருவதே தமது விருப்பம் என பதவி நீக்கம் செய்யப்பட்ட விமானப்படை முன்னாள் அதிகாரி சைடி அகமட் (படம்) தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் மற்றும் பகாங் மாநில அரசுகள் சைடிக்கு பணி வாய்ப்பு தர தயாராக இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த வாய்ப்புகள் குறித்து தாம் மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
“முதலில் இரு மாநில அரசுப் பிரதிநிதிகளையும் சந்தித்து, இந் வாய்ப்புகள் குறித்துப் பேச வேண்டும். எனக்குப் பொருந்தி வரும் எனில், அந்த வாய்ப்புகளை ஏற்பேன்,” என்றார் சைடி.
எனினும் தற்போதைய நிலையில் தனது நேரடி விற்பனைத் தொழிலைக் கவனிப்பதே தமது குறிக்கோளாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், புத்தகங்கள் எழுதும் பணியையும் தொடரப் போவதாகத் கூறியுள்ளார்.
“எனது அடுத்த புத்தகம் தற்காப்பு விவரங்கள் குறித்தும், என் மீதான வழக்கு தொடர்பானதாகவும் இருக்கும். எனது அடுத்த புத்தகத்துக்கு இவையே நல்ல தலைப்பாக இருக்குமெனக் கருதுகிறேன்,” என்று சைடி தெரிவித்தார்.
கடந்த 2013 பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட மை குறித்து, தற்காப்பு அமைச்சின் அனுமதி பெறாமல் தனது கருத்தை வெளியிட்டதாக சைடி மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து கடந்த திங்கட்கிழமை ராணுவ நீதிமன்றம் (a court martial) அவரைப் பணி நீக்கம் செய்தது.
தவிர தனது பணியிட மாற்றம் குறித்த தகவலை வெளியிட்டதாகவும் சைடி மீது குற்றம் சுமத்தப்பட்டது.