டிசம்பர் 2 – அதிகமான சத்துக்களைக் கொண்ட பருப்பு வகைகளில் ஒன்று பாதாம் பருப்பு. பாதாம் பருப்பு உடலில் கொழுப்பை அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு.
பாதாம் இனிப்புகளில் சேர்க்கப்படும் சர்க்கரையும், கொழுப்பும்தான் உடல் கொழுப்புக்கும் வேறு பல நோய்களுக்கும் கொண்டுச் செல்கிறது.
இவை இரண்டையும் நீக்கிவிட்டால் பாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவுதான். இதன் மகத்துவத்தை அறியாத பலர் இதனை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. பாதாமில் வைட்டமின்களும், தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் சாப்பிட வேண்டிய பருப்பு வகைகளில் இதுவும் ஒன்று. புரதம், நார்ப் பொருட்களோடு சேர்த்து உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களான ஒமேகா 3, ஒமேகா 6 ஆகியவையும் பாதாமில் உள்ளன.
இவற்றைத் தவிர வைட்டமின் – ஈ, துத்தநாகம், சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம் இதில் இருக்கிறது. பாதாமில் உள்ள கொழுப்பு, இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கொழுப்பாகும்.
25 கிராம் பாதாமில் ஒரு நாளைக்குத் தேவையான 70 சதவீத வைட்டமின் ஈ உள்ளது. மற்ற பருப்புகளை விட பாதாமில் கால்சியம் அதிகம் இருக்கிறது. அதோடு சேர்த்து, புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் – பி 17 என்ற சத்தும் பாதாமில் உள்ளது.
மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சனைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு துணை புரிகிறது.
இவற்றை எல்லாம் மனதில் வைத்து, அவ்வப்போது பாதாம் பருப்பு சாப்பிடுவோம்!