வாஷிங்டன், டிசம்பர் 4 – பிரதமர் மோடி இந்தியாவின் அதிகாரத்துவத்தை உலுக்கிவிட்டார் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் வியாபார வட்டமேசை கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கலந்து கொண்டார். அமெரிக்காவின் முன்னணி தனியார் நிறுவனத் தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் உலக அளவில் நிலவும் பொருளாதார நிலைமை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.
அப்போது ஒபாமா கூறுகையில், “இந்தியாவின் அதிகராத்துவத்தை உலுக்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி என்னை மிகவும் கவர்ந்துவிட்டார். ஆனால் இது உடனே முடிந்துவிடும் விஷயம் அல்ல”.
“அதனால் இந்த விவகாரத்தில் மோடி தொடர்ந்து எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுகிறார் என்பதை பார்க்க வேண்டும் என்றார்”. முன்னதாக கடந்த மாதம் மியான்மரில் நடந்த கிழக்கு ஆசிய மாநாட்டில் ஒபாமா கலந்து கொண்டார்.
அப்போது அவர் மோடியை ‘மேன் ஆப் ஆக்ஷன்’ அதாவது செயல் நாயகன் என்று பாராட்டினார். இந்த ஆண்டு டெல்லியில் நடக்கும் குடியரசு தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஒபாமா கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.