Home கருத்தாய்வு மக்கள் கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கை முன்கூட்டியே வெளியிட்டதால் பின்னடைவா?

மக்கள் கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கை முன்கூட்டியே வெளியிட்டதால் பின்னடைவா?

1020
0
SHARE
Ad

Pakatan-Logo-Sliderபிப்ரவரி 26 – பொதுவாக, பொதுத் தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்ட பின்னர்தான் ஓர் அரசியல் கட்சியின் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம்.

ஆனால் மலேசிய நாடாளுமன்றம் இன்னும் கலைக்கப்படாத நிலையில், பொதுத்தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் மக்கள் கூட்டணியின் பொதுத் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கை (manifesto) வெளியாகி இருப்பது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதோடு, இதனால் மக்கள் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற ஐயப்பாட்டையும் எழுப்பியிருக்கின்றது.

காரணம், தேசிய முன்னணியின் இறுகிய கைப்பிடிக்குள் அடங்கியிருக்கும் அனைத்து தகவல் ஊடகங்களும், மக்கள் கூட்டணியின் கொள்கை விளக்க அறிக்கையின் அம்சங்களைக் குறி வைத்து குறைபாடுகளை கூறத் தொடங்கிவிட்டன,

#TamilSchoolmychoice

இதனால் மக்கள் கூட்டணியின் தலைவர்கள் தாங்கள் வெளியிட்ட கொள்கை அறிக்கையை மறுநாளே தற்காத்துப் பேச வேண்டிய நிலைமைக்கு ஆளாகி விட்டார்கள்.

அது மட்டுமல்லாமல், இந்த கொள்கை அறிக்கையை ஆளுக்கு ஆள் அலசி ஆராய்ந்து, அக்கு வேறு ஆணி வேறாக நுணுக்கமாக விளாச ஆரம்பித்துவிட்டார்கள்.

கொள்கை அறிக்கையை முன்கூட்டியே வெளியிட்ட காரணத்தால், இதனால் மக்கள் கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம். நன்கு ஆராயாமல் மக்கள் கூட்டணி தலைவர்கள் முன்கூட்டியே கொள்கை அறிக்கையை யோசிக்காமல் வெளியிட்டது பலவித பாதிப்புக்களக் கொண்டு வரலாம்.

குறிப்பாக, மக்கள் கூட்டணியின் கொள்கை விளக்க அறிக்கையை ஆராய்ந்து அதற்கு மாற்றான ஓர் அறிக்கையை தயாரிப்பதற்கும், மக்கள் கூட்டணியின் வாக்குறுதிகளுக்கு பதில் கொடுக்கவும் தேசிய முன்னணியினருக்கு நல்ல கால அவகாசம் கிடைத்து விட்டது.

இந்த வாய்ப்பை தேசிய முன்னணியினருக்கு மக்கள் கூட்டணி தற்போது ஏற்படுத்தித் தந்துவிட்டது.

பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது மேலும் தாமதமானால் அதற்குள் மக்கள் கூட்டணியின் அறிக்கை பழைய பஞ்சாங்கமாகி விடும்.

தேசிய முன்னணி கொள்கை அறிக்கை எடுபடுமா?

அதே வேளையில் புதிதாக வெளியிடப்படும் தேசிய முன்னணியின் கொள்கை அறிக்கையின் அம்சங்களைப் பற்றியே – அவை கவர்ச்சிகரமாக இருந்தால் – அவை குறித்தே பொது மக்கள் இனி பேசத் தொடங்குவார்கள்.

இதனாலும் மக்கள் கூட்டணியின் கொள்கை அறிக்கை அது எவ்வளவுதான் கவர்ச்சிகரமாக இருந்தாலும் அதன் நல்ல அம்சங்கள் இருட்டடிப்பு செய்யப்படும் நிலைமை ஏற்படப் போகின்றது.

இருந்தாலும், மக்கள் கூட்டணி தங்களின் கொள்கை அறிக்கையை முன்கூட்டியே வெளியிட்டதில் சில சாதகங்களும் இருக்கவே செய்கின்றன. இதில் காணப்படும் பல அம்சங்கள் மக்கள் கூட்டணித் தலைவர்கள் ஏற்கனவே தங்களின் பிரச்சாரக் கூட்டங்களிலும், தகவல் ஊடகங்களிலும் திரும்பத் திரும்ப கூறி வந்த விஷயங்கள்தான் என்பதாலும் மக்களைக் கவர்கின்ற விஷயங்கள் இவை என்பதாலும் இவற்றை முன்கூட்டியே மக்களின் பார்வைக்கு கொண்டு சென்று சேர்த்தது மக்கள் கூட்டணிக்கு ஒரு சாதகமே ஆகும்.

எனவே, தங்களின் கொள்கை அறிக்கை என்ன என்ற சஸ்பென்சை, அதாவது ரகசியத்தை முன்கூட்டியே மக்களுக்குத் தெரிவித்து விட்டு பின்னர் அது குறித்த தங்களின் பிரச்சாரத்தை இனி மக்கள் கூட்டணித் தலைவர்கள் நாடு முழுக்கத் தொடரலாம்.

மக்கள் கூட்டணி மூன்று கட்சிகளை – மூன்று வெவ்வேறு விதமான கொள்கைகளை உள்ளடக்கிய கட்சிகளைக் கொண்ட கூட்டணி என்பதால் அதன் கொள்கை அறிக்கை என்ன என்பதும் அதன் சாராம்சங்கள் என்ன என்பதை முன்கூட்டியேஅறிவிக்கப்பட வேண்டியதும் மக்கள்கூட்டணித் தலைவர்களுக்கு அவசியமானதாகி விட்டது.

அதே வேளையில் மக்கள் கூட்டணியின் இரண்டாம் நிலை தலைவர்களுக்கும் அடிமட்டத் தொண்டர்களுக்கும் மக்கள் கூட்டணியின் கொள்கை அறிக்கை என்ன என்பது இனி எல்லாருக்கும் தெரிந்த ஒன்றாகி விடும் என்பதால் அவர்கள் இனி நேரடியாக வாக்காளர்களை அணுகி தங்களின் கூட்டணியின் கொள்கைஅறிக்கைகளை வாக்காளர்களுக்கு விளக்கத் தொடங்கலாம்.

இதன் மூலம் மக்கள் கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கைதான் மக்களிடத்தில் முதலில் சென்று சேர்கின்றது என்பதும் அதனால் இந்த அறிக்கைதான் அவர்களின் மனங்களில் தங்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எது எப்படி இருப்பினும், தேசிய முன்னணியின் பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கை வெளியான பின்னர்தான் இரு கூட்டணிகளின் கொள்கை அறிக்கைகளுக்கும் இடையிலான ஒப்பீடுகள் பொதுமக்களிடையே உலா வரத் தொடங்கும்.

யாருடைய கொள்கை அறிக்கை சிறப்பானது என்பதை வாக்காளர்கள் சிந்தித்து முடிவெடுக்கவும், நிர்ணயிக்கவும் அதன்பிறகு வாக்களிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பும் ஏற்படும்.

-இரா.முத்தரசன்