கோலாலம்பூர், டிசம்பர் 6 – இன்று பிற்பகல் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், தகவல் ஊடகங்கள் தெரிவித்திருந்த மஇகா மறுதேர்தல் குறித்த விவரங்களை மறு உறுதிப்படுத்தினார்.
இன்று பிற்பகல் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் டாக்டர் சுப்ரா..அவருக்கு வலது புறம் மஇகா தலைமைச் செயலாளர் பிரகாஷ் ராவ், இடது புறத்தில் டத்தோ சோதிநாதன், டத்தோ சரவணன்,,,
கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் வெளிநாட்டில் இருப்பதால் அவருக்குப் பதிலாக இடைக்காலத் தேசியத் தலைவர் என்ற முறையில், கட்சியின் சார்பில் சங்கப் பதிவகத்தின் முடிவுகளை தான் அறிவிக்க முன்வந்ததாகவும் அவர் கூறினார்.
சங்கப் பதிவக முடிவின்படி, தேசிய நிலையிலான மூன்று உதவித் தலைவர்கள் மற்றும் 23 மத்திய செயலவை பதவிகளுக்கான மறுதேர்தல் அடுத்த 90 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டுமென்ற தகவலை அவர் உறுதிப்படுத்தினார்.
சங்கப் பதிவதிகாரியின் உத்தரவுப் படி, மேலும் 8 மஇகா தொகுதி காங்கிரசுகளுக்கான பொறுப்பாளர்களுக்கு மறு தேர்தல் நடத்தப்படும். அவை பாயான் பாரு, புக்கிட் குளுகோர், சுபாங், பண்டார் பாரு கூலிம், தைப்பிங், தம்புன், சிப்பாங், ஜாசின் ஆகிய எட்டு தொகுதி காங்கிரசுகளாகும்.
மறு தேர்தல் நடத்தப்பட உத்தரவிடப்பட்டிருக்கும் இரண்டு கிளைகள் மெர்லிமாவ் உத்தாரா மற்றும் ரூமா பங்சா பெக்கிலிலிங் செலாத்தான் ஆகியவையாகும்.
மேலும் சில தொகுதி காங்கிரசுகளுக்கு சில பதவிகளுக்கு மட்டும் மறுதேர்தல் நடத்தப்படும். பத்து கவான் தொகுதியின் துணைத் தலைவருக்கான தேர்தல், கோத்தா ராஜா தொகுதியின் தலைவருக்கான தேர்தல், தஞ்சோங் மாலிம் தொகுதி தலைவருக்கான தேர்தல், தாமான் கோப்பராசி போலிஸ் கிளைத் தலைவருக்கான தேர்தல் ஆகியவை மீண்டும் நடத்தப்பட வேண்டுமெனவும் சங்கப் பதிவகம் உத்தரவிட்டுள்ளது.
சங்கப் பதிவகத்தின் முடிவு அறிவிக்கப்பட்ட நேற்று மஇகா சரித்திரத்தில் ஒரு கறுப்பு தினம் என வர்ணித்த டாக்டர் சுப்ரா, ஆனால், அதற்காக மஇகா தனது செயல்பாட்டிலும் இந்திய சமுதாயத்திற்கான போராட்டத்திலும் கொஞ்சமும் பின்வாங்கப்போவதில்லை என்றும் தொடர்ந்து மஇகா தனது அரசியல் போராட்டத்தைத் தொடரும் என்றும் உறுதியுடன் கூறினார்.
“சங்கப் பதிவகத்தின் இந்த முடிவு எங்களுக்கு ஒரு பாடம். இதன் மூலம் எங்களின் பலவீனங்களையும், குறைகளையும் நாங்கள் அடையாளம் கண்டு நிவர்த்தி செய்து கொள்ள எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனைப் பயன்படுத்தி எங்களின் மஇகா சட்டவிதிகளில் உள்ள குறைபாடுகளை நாங்கள் சரிசெய்து கொள்ள முற்படுவோம்” என்றும் சுகாதார அமைச்சருமான சுப்ரா தெரிவித்தார்.
ஜனநாயத்தில், தேர்தல் நடைபெறுவதும், அந்தத் தேர்தல் முடிவுகளினால் அதிருப்தி கொள்ளும் ஒரு பிரிவினர் சட்டத்திற்குட்பட்டு தேர்தல் முறைகேடுகள் புகார்களை சமர்ப்பிப்பதும், ஜனநாயக நடைமுறையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் அங்கம் என்றும் குறிப்பிட்ட அவர், இந்த முடிவுகளை ஏற்றுக் கொண்டு கட்சி தொடர்ந்து செயல்படும் என்றும் நாங்கள் துவண்டுவிட மாட்டோம் என்றும் உறுதியோடு குறிப்பிட்டார்.
சங்கப் பதிவகத்தின் முடிவுகளைச் செயல்படுத்தும் நோக்கில் நடைபெறவிருந்த மஇகா பொதுப் பேரவையும், மகளிர், இளைஞர் பகுதி மாநாடுகளும் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.