கோலாலம்பூர், டிசம்பர் 7 – ஸ்கைப் மற்றும் வைபர் செயலிகளை ஒப்பிடுகையில், வாட்ஸ் எப் அதிக பயனர்களைக் கொண்டிருந்தாலும், இலவச அழைப்புகளை ஏற்படுத்த பயனர்கள் ஸ்கைப் அல்லது வைபர் செயலிகளை பயன்படுத்தி ஆக வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில், இலவச அழைப்புகளை அறிமுகப்படுத்தும் முயற்சியில் உள்ள வாட்ஸ் எப், அதற்கான பணிகளை துரிதப்படுத்தி உள்ளது.
உலக அளவில் வாட்ஸ் எப்பிற்கு சுமார் 600 மில்லியன் பயனர்கள் உள்ளனர். தகவல் பரிமாற்றத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய வாட்ஸ் எப், அறிமுகமான ஒரு சில வருடங்களில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு நட்பு ஊடகங்களை பின்னுக்குத் தள்ளி அபார வெற்றியை தக்க வைத்துக் கொண்டது.
எனினும், இலவச அழைப்புகள் இல்லாதது வாட்ஸ் எப்-ல் ஒரு சிறு குறையாக கருதப்படுகின்றது. இதற்காக பயனர்கள் மற்ற செயலிகளை பயன்படுத்த வேண்டி உள்ளது.
அமெரிக்காவிற்குள் அழைப்புகளை ஏற்படுத்த ஸ்கைப் மற்றும் வைபர் நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கும் நிலையில், விரைவில் இந்த வசதி வாட்ஸ் எப்-ல், மிகக் குறைந்த கட்டணத்தில் அறிமுகமாகும் என்று கூறப்படுகின்றது. அவ்வாறு வாட்ஸ் எப்-ல் இலவச அழைப்புகளை ஏற்படுத்து வசதி அறிமுகமானால் பயனர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.