நியூ டெல்லி, டிசம்பர் 7 – ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின், ஊரி பகுதியில் உள்ள இந்திய இராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள், கடந்த 5-ம் தேதி அதிகாலை 3.10 மணிக்குத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 23 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் பாகிஸ்தான் குறியீடுகளுடன் கூடிய உணவுப் பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் இருந்து உணவுப் பொட்டலங்களை கண்டெடுத்துள்ளோம். அதில், பாகிஸ்தான் இராணுவம் வழக்கமாகப் பயன்படுத்தும் குறியீடுகள் உள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “தீவிரவாதிகளிடமிருந்து இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உணவுப் பொட்டலங்களில் மூலமாக இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் அவர்கள், இந்திய இராணுவத்தினருடன் நீண்ட நாள்கள் சண்டையிடும் திட்டத்துடன் வந்திருப்பதும் தெரிய வருகின்றது” என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் லாகூரில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஜமா உத் தவா தீவிரவாதி ஹபீஸ் சயீத், காஷ்மீர் விடுதலைக்கு பாகிஸ்தான் உதவ வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
படம் : EPA