வாஷிங்டன், டிசம்பர் 7 – பொருளாதாரத்தை பொறுத்தவை இனி ஆசியாவும் தனது கையை உயர்த்தும் என சீனா நிரூபித்துள்ளது. தொடர்ந்து உலகப் பொருளாதாரத்தில் முன்னிலை வகித்து வந்த அமெரிக்காவை முந்தி சீனா, முதலிடம் பெற்றுள்ளதாக அனைத்துலக நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இறுதியில், சீனாவின் பொருளாதாரம் 17.6 ட்ரில்லியன் டாலர்களைத் தொடும் என்றும், அதே சமயத்தில் அமெரிக்கப் பொருளாதாரம் 17.4 ட்ரில்லியன் டாலர்களாகச் சரியும் என்றும் ஐஎம்எப் தெரிவித்துள்ளது. கடந்த 10 வருடங்களுக்கு முன், அமெரிக்காவின் தயாரிப்புகள் சீனாவை விட மூன்று மடங்கும் அதிகம். ஆனால் தற்சமயம் சீனா அமெரிக்காவிற்கு நிகராக உற்பத்தி செய்கிறது.
உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் வளர்ச்சி 16.5 சதவீதமாகும். அதேசமயத்தில் அமெரிக்காவின் வளர்ச்சி 16.4 சதவீதமாகும். இது பற்றி ஆய்வாளர்கள் கூறுகையில், “சீனாவின் வளர்ச்சி நொடிப் பொழுதில் ஏற்படவில்லை. இந்த வளர்ச்சி அந்நாட்டின் எதிர்காலத் திட்டமிடலை வெளிப்படுத்துகிறது. இது மிக நிதானமாக எதிர்கால நோக்குடன் வகுக்கப்பட்ட திட்டங்களுக்கான பலன்” என்று கூறியுள்ளனர்.
கடந்த 1870-களில் உலகின் பெரும் பணக்கார நாடாக சீனா திகழ்ந்தது என்று வரலாறு கூறுகின்றன. அதன் பிறகு அங்கு ஏற்பட்ட ஆட்சி மாற்றம், சீனப் பொருளாதாரத்தை சரிவிற்குத் தள்ளியது. இந்நிலையில் சுமார் ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு சீனா, மீண்டும் உலகின் பெரும் பொருளாதார நாடாக தன்னை நிரூபித்துள்ளது.