கௌஹாத்தி, டிசம்பர் 7 – மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை அசாம் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கொன்று அந்நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு செய்ய திட்டமிட்டதிலும் அந்நபருக்கு தொடர்பு உள்ளதாக நம்பப்படுகிறது.
ஷன்னோர் அலோம் என்ற அந்நபர் புதன்கிழமை இரவு அசாம் மாநில கிராமம் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார். அந்நபர் கிழக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள வங்கதேச இயக்கத்தின் உறுப்பினர் என்பது தெரிய வந்துள்ளதாக உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“சில உளவுத் தகவல்களின் அடிப்படையில் நல்பாரி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இரவு நேரத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தனது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அலோம் பிடிபட்டார்,” என்றார் அந்த அதிகாரி.
கடந்த அக்டோபரில் வங்கதேசம் மற்றும் மேற்குவங்க எல்லைப் பகுதியில் அமைந்துள்ள புர்த்துவான் என்ற இடத்தில், வெடிகுண்டுகள் தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில், வங்கதேசத்தின் ஜமாத் உல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.
இதையடுத்து வங்கதேச பிரதமர் ஹசீனாவை படுகொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததை இந்திய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து ஷன்னோர் அலோம் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி முதல் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் போலீசாரிடம் பிடிபட்டுள்ள அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.