கோலாலம்பூர், டிசம்பர் 7 – மீண்டும் மறுதேர்தல் நடத்த வேண்டுமென சங்கப் பதிவதிகாரியின் உத்தரவைத் தொடர்ந்து மஇகா ஒரு மிகப் பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்ளாமலிருக்க மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் பதவி விலக வேண்டும் அல்லது தனது வழிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டுமென உத்துசான் மலேசியா மலாய்ப் பத்திரிக்கை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தப் பத்திரிக்கை அம்னோவால் பின்னணியில் இருந்து நடத்தப்படும் பத்திரிக்கை என்பதால், பழனிவேலுவின் பதவி விலகல் நெருக்குதலுக்கு அம்னோவும் உடந்தையாக இருக்கின்றது என்பது தெளிவாகியுள்ளது.
உத்துசான் மலேசியா பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவின் அதிகாரபூர்வ எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வண்ணம் அவாங் செலாமாட் (Awang Selamat) என்ற புனைப் பெயரில் அதன் கருத்துகள் அடிக்கடி எழுதப்படுவது வழக்கமாகும்.
அதன்படி, இன்றைய ஞாயிறு பதிப்பான மிங்குவான் மலேசியாவில் “சில காரணங்களால் பழனிவேல் கட்சியைத் தொடர்ந்து வழிநடத்துவது தகுதியில்லை என்றால் அவர் பதவியிலிருந்து விலகிக் கொண்டு மற்றவர்களுக்கு வழிவிடுவதே சாலச் சிறந்தது” எனக் கூறியுள்ள அவாங் செலாமாட், இல்லாவிட்டால் அவர் உடனடியாக தனது குறைகளைத் திருத்திக் கொண்டு தனது தலைமைத்துவ ஆற்றலை நிரூபிக்க வேண்டுமென்றும் எழுதியுள்ளார்.
சோம்பலும் மெத்தனமும் நிறைந்த தலைவர்
சோம்பலும், மெத்தனமும் நிறைந்த ஒரு தலைவர் பழனிவேல் என மஇகா அடிமட்டத் தலைவர்களிடமிருந்து பல்வேறு குறைகூறல்கள் எழுந்து வருகின்றன என்பதையும் உத்துசான் மலேசியா சுட்டிக் காட்டியுள்ளது.
இந்திய சமுதாயத்தினரை ஈர்க்கும் ஆற்றல் இன்றி செயல்படும் பழனிவேல், வெறும் வெற்று வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார் – பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாதவாறு கவனமாக அரசியல் முடிவுகளை எடுக்கின்றார் – தன்னம்பிக்கையும் உறுதியும் இன்றி செயலாற்றுகின்றார் என்பதோடு, இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகளை முன்னின்று கையாண்டு தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் அந்தப் பத்திரிக்கை குறை கூறியுள்ளது.
இவையெல்லாம் உண்மையா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, இன்றைய நிலைமையில் இதுதான் மஇகாவைப் பற்றியும், பழனிவேல் பற்றியும் மக்களிடையே இருக்கின்ற தோற்றம் – எனவே, இதில் கொஞ்சமாவது அடிப்படை உண்மைகள் இருக்கத்தான் வேண்டும் என உத்துசான் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை எதிர்த்துப் போராடாமல் பழனிவேல் எப்போதும் ‘மௌனம்’ காத்து வருகின்றார் – அவர் தனது ஆற்றலையும் திறமையையும் நிரூபிக்க வேண்டிய தருணம் இது – அரசியல் களம் என்பது ஓர் அரசியல் தலைவர் மௌனமாக இருந்து நடத்தப்பட வேண்டிய அரங்கம் அல்ல – என்றெல்லாம் அவாங் செலாமாட் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு பதவியில் இருந்து கொண்டு துணிச்சலான முடிவுகளை எடுக்க முடியவில்லை என்றால் அந்தப் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதில் பயன் என்ன?” என்றும் கேள்வி எழுப்பியுள்ள உத்துசான், “தன்மீது சுமத்தப்பட்டுள்ள விமர்சனங்கள் தவறு என்பதை நிரூபித்து, கட்சியில் மேம்பாடுகளைக் கொண்டுவர வேண்டிய கட்டாயச் சூழலில் பழனிவேல்இருக்கின்றார்” என்றும் எழுதியுள்ளது.
கட்சியின் தோற்றம் மிகவும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது என்ற நிலையில் பழனிவேல் பதவி விலக வேண்டுமென பல்வேறு மஇகா தலைவர்கள் தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.