காஜாங், டிசம்பர் 8 – பதவிகளும் பட்டங்களும் தமக்கு முக்கியமல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். காஜாங்கில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் உரையாற்றிய அவர், ஒரு மனிதனின் பதவி அல்லது அதிகாரம் குறித்து கடவுள் கண்டுகொள்வதில்லை என்றார்.
தனக்கு அளித்திருந்த டத்தோஸ்ரீ பட்டத்தை திரும்பப் பெறுவதாக அண்மையில் சிலாங்கூர் அரண்மனை அறிவித்திருந்ததை மறைமுகமாக சுட்டிக்காட்டியே அன்வார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“ஒருவருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று கடவுள் பார்ப்பதில்லை. நாம் எந்த பதவியில் இருக்கிறோம் என்றும் அவர் கவனிப்பதில்லை. ஆனால் கடவுளின் பெயரால் நாம் செய்யக்கூடிய காரியங்களை மட்டுமே அவர் கவனிப்பார்,” என்றார் அன்வார்.
பண்டைய எகிப்தில், சகல அதிகாரங்களும் பதவியும் செல்வமும் கொண்டிருந்த பரோவா கடவுளால் நிராகரிக்கப்பட்டதை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.
“நிறம் மற்றும் மத நம்பிக்கைகளையும் மீறி ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் அன்பை மட்டுமே கடவுள் கணக்கில் கொள்வார்,” என்று அன்வார் தெரிவித்தார்.
அன்வாருக்கு அளிக்கப்பட்டிருந்த டத்தோஸ்ரீ பட்டத்தை திரும்பப் பெறுவதாக கடந்த வியாழக்கிழமை சிலாங்கூர் சுல்தான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.