கோலாலம்பூர், டிசம்பர் 8 – விமான சேவை நடத்துவதில் மலேசியர்கள் முட்டாள் தனமாக நடந்து கொள்கின்றனர் என முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் கடுமையாக சாடியுள்ளார்.
இரு பேரிடர்களால் பெரும் பொருளாதார பின்னடைவிற்கு உள்ளான மாஸின் தலைமை பொறுப்பை, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோப் ஆர் முல்லர் ஏற்க உள்ளதாக கஸானா நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தது. இது தொடர்பாக முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட், தி மலாய் மெயில் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
“மலேசியர்கள் முட்டாள்தனமாக செயல்படுகின்றனர். அவர்களுக்கு விமான சேவையை நிர்வகிப்பது எப்படி என்று தெரியவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் , “நஷ்டத்திற்கு காரணமானவர்கள் தங்களை தற்போது சரியான பாதையில் திருப்பிக் கொள்ள முயற்சி செய்கின்றனர்” என்று அவர் கசானா நிறுவனத்தையும் மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 1980-ம் ஆண்டுகளில் மலேசியாவிற்கு, பில்லியன்களில் இலாபம் கொழிக்கும் நிறுவனமாக இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ், அடுத்தடுத்த ஆண்டுகளில் கடும் நஷ்டத்தை சந்தித்ததால், அப்போதைய பிரதமர் மகாதீர் அதனை தனியாருக்கு தாரை வார்த்தார்.
பல்வேறு வர்த்தக சூழல்களுக்குப் பிறகு கசானா நேஷனல்ஸ் நிறுவனம் மாஸ் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக மாறியது. இந்நிலையில், இந்த ஆண்டு மாஸ் சந்தித்த இரு பெரும் பேரிடர்கள், மாஸ் நிறுவனத்தை மீள முடியா பாதிப்புக்கு உள்ளாக்கியது. அதனை மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திருப்ப கசானா நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது.
இந்நிலையில் மாஸ் நிர்வாகம் பற்றிய முன்னாள் பிரதமர் மகாதீரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.